ஷா ஆலம், ஏப் 6- இவ்வாண்டில் பள்ளி செல்லும் 21,432 சிலாங்கூர் மைந்தர் வாரிசு நிதி (தாவாஸ்) உறுப்பினர்கள் பள்ளி நுழைவு திட்டத்தின் கீழ் உதவி பெற்றனர்.
புத்தகப் பை, குடிநீர் போத்தல், உணவு டப்பா, எழுது உபகரணங்கள், முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக தாவாஸ் பொது உறவுப் பிரிவு கூறியது.
இந்த உதவிப் பொருள்கள் கடந்தாண்டு நவம்பர் முதல் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளின் சேவை மையங்கள் வாயிலாக விநியோகிக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
இவ்வாண்டில் முதலாம் வகுப்பில் சேர்வதற்கு பதிந்து கொண்ட மற்றும் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இந்த உதவிப் பொருள்களைப் பெற தகுதி பெற்றவர்களாவர் என்று முகமது காஃபி அசாரி கூறினார்.
மாணவர்களின் பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் அரசாங்கத்தின் இத்திட்டத்தை பெரிதும் வரவேற்றதோடு கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் இந்த உதவி தங்களின் பொருளாதார சுமையை பெரிதும் குறைத்துள்ளதாக கூறினர் என்றார் அவர்.
இத்திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் இத்திட்டத்தை அமல் படுத்த தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக அவர் சொன்னார்.








