ஷா ஆலம், மார்ச் 12- இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை பண்டார் புக்கிட் பூச்சோங் பகுதியில் நடைபெறவுள்ளது.
சுபாங் ஜெயா நகராண்மைக்கழக பல்நோக்கு மண்டபத்தில் காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரை நடைபெறும் இந்த சோதனை இயக்கத்தில் சுற்றுவட்டார மக்கள் கலந்து பயன்பெறுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
கோவி-19 நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த இயக்கத்தில் தாமான் முத்தியாரா இண்டா, தாமான் சவுஜானா பூச்சோங் மக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று அவர் சொன்னார்.
இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக பொதுமக்கள் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டு மாநிலம் முழுவதும் இலவச பரிசோதனை இயக்கங்களை நடத்துவதற்காக மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் அடர்த்தியான மக்கள் தொகையை கொண்ட பகுதிகளில் வசிப்போர் ஆகியோரை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் வழி சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.








