ஷா ஆலம், மார்ச் 9- சமூகத்தின் மேம்பாட்டை உறுதி செய்வதில் பொறுப்புணர்வுடன் பணியாற்றும்படி இந்திய சமூகத் தலைவர்களை (கே.கே.ஐ.) பரிவுமிக்க அரசுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டமன்றத் தொகுதிகளில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக அனைத்துத் தரப்பினருடனும் குறிப்பாக பெங்குளுக்களுடன் அணுக்கமான உறவை இந்திய சமூகத் தலைவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்திய சமூகத் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் இந்திய சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை படிப்படியாய களையமுடியும் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் இன்று நடைபெற்ற இந்திய சமூகத் தலைவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றுவதற்காக 50 இந்திய சமூகத் தலைவர்களை மாநில அரசு நியமித்துள்ளது. கடந்த ஜனவர் 1ஆம் தேதி முதல் அடுத்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை ஈராண்டுகளுக்கு அவர்கள் இப்பதவியை வகிப்பர்.
மாநில அரசின் திட்டங்களை வெற்றியடையச் செய்வதில் பெரிதும் உறுதுணையாக இருந்த முன்னாள் இந்திய சமூகத் தலைவர்களுக்கு தாங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கணபதிராவ் குறிப்பிட்டார்.
மாநில அரசுக்கும் மக்களுக்குமிடையே அவர்கள் தொடர்பாளர்களாக செயல்பட்டதோடு அரசாங்கத்தின் அனைத்து உதவிகளும் முறையாக மக்களைச் சென்றடைவதை அவர்கள் உறுதி செய்தனர் என்றார் அவர்.








