நிரந்தர வேலை பெறும் 'கிக்' தொழிலாளர்களுக்கு ஒரே நேரத்தில் 1,200 ரிங்கிட் உதவி : சிலாங்கூர் அரசு பரிசீலனை

23 நவம்பர் 2026, 8:45 AM
நிரந்தர வேலை பெறும் 'கிக்' தொழிலாளர்களுக்கு ஒரே நேரத்தில் 1,200 ரிங்கிட் உதவி : சிலாங்கூர் அரசு  பரிசீலனை

ஷா ஆலாம், நவ 23: முறையான நிரந்தர வேலை வாய்ப்பைப் பெறும் 'கிக்' (gig) தொழிலாளர்களுக்கு 1,200 ரிங்கிட் நிதியுதவியை ஒரே தவணையாக வழங்கும் பரிந்துரையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மனிதவள, வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு தெரிவித்தார்.

“இது மிகவும் நல்ல யோசனை. தற்போதைய கொள்கையின்படி, ஓராண்டுக்கு மாதந்தோறும் 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் ஒரு நிறுவனம் அல்லது அமைப்பிடமிருந்து வேலைக்கான உறுதிப்படுத்தல் கடிதத்தைப் பெற்றால், முழுத் தொகையையும் ஏன் ஒரே நேரத்தில் வழங்கக் கூடாது?

“புதிய வேலையைத் தொடங்கும்போது அல்லது வேறு துறைக்கு மாறும்போது ஏற்படும் ஆரம்பக்கட்டச் செலவுகளைச் சமாளிக்க அவர்களால் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தப் பரிந்துரையை நான் பரிசீலிப்பேன்,” என்று இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.

'கிக்' தொழிலாளர்கள் மாதாந்திர ஊதியம் பெறும் வேலைக்கு மாறும்போது எதிர்கொள்ளும் நிதிச் சவால்கள் குறித்துப் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டானியல் அல் ரஷீத் ஹரோன் அமினார் ரஷீத் எழுப்பிய கவலைக்குப் பதிலளிக்கும் போதே பாப்பாராயுடு இவ்வாறு தெரிவித்தார்.

முறையான வேலை வாய்ப்புக் கடிதம் கிடைத்தவுடன் கிக் தொழிலாளர்களுக்கு 1,200 ரிங்கிட்டை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று டானியல் பரிந்துரைத்திருந்தார்.

முன்னதாக, இம்மாதம்( நவம்பர்) 13-ஆம் தேதி, 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, 'பி-ஹெய்லிங்' (p-hailing) ஓட்டுநர்களாகப் பணிபுரியும் 5,000 சிலாங்கூர் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதந்தோறும் 100 ரிங்கிட் மதிப்புள்ள 'கித்தா சிலாங்கூர் கிக் வவுச்சர்' (Kita Selangor Gig Voucher) வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும், அக்டோபர் 30-ஆம் தேதி நிலவரப்படி, சொக்சோ-சமூகப் பாதுகாப்பு அமைப்பின் சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 'கிக்' தொழிலாளர்கள் உட்பட 6,218 பேர் 23.07 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றுள்ளனர் என்று பாப்பாராயுடு குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் உள்ள 'கிக்' தளங்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, தொழிலாளர்களை முறையாகப் பதிவு செய்வதை ஊக்குவிக்கவும், அவர்களுக்குக் காப்பீட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குறைந்த வருமானம் ஈட்டும் 'கிக்' தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்கு உதவும் வகையில், கிராப் (Grab) மற்றும் ஷாப்பி (Shopee) போன்ற தளங்களிடமிருந்து வருமானத் தரவுகளைப் பெறுவது குறித்த டானியலின் மற்றொரு பரிந்துரையையும் அவர் வரவேற்றார்.

இது தொடர்பாகப் பல நிறுவனங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய தகவல்கள் போதிய வருமானம் இல்லாத தொழிலாளர்களைக் கண்டறியவும், அவர்கள் பயிற்சி பெறுவதற்கோ அல்லது பிற வேலைவாய்ப்புத் துறைகளுக்கு மாறுவதற்கோ உள்ள வாய்ப்புகளை ஆராயவும் உதவும் என்று பாப்பாராயுடு மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.