ஷா ஆலாம், நவ 11 — இவ்வாரம் வெள்ளிக்கிழமை 2027-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தொடருக்குத் தாமதமின்றி சரியான நேரத்திற்கு வருமாறு, சிலாங்கூர் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் லாவ் வெங் சான் அறிவுறுத்தினார்.
இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று அவர் கூறினார்.
இக்கூட்டத்தொடர் ஒரு வாரத்திற்கும் சற்று கூடுதல் காலம் மட்டுமே நடைபெற உள்ளதால், சட்டமன்ற உறுப்பினர்கள் வராமல் இருப்பதற்கோ தாமதமாக வருவதற்கோ எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சிப் பொறுப்பின் இறுதி நிகழ்ச்சி நிரல்களில் இந்த மாநில வரவு செலவுத் திட்டத் தாக்கலும் ஒன்று என்பதால், பலரின் பார்வையும் இக்கூட்டத்தொடரின் மீது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலம் மற்றும் அதன் தொகுதிகளின் நிதித் தேவைகளுக்கு இடையே சமநிலையை உறுதி செய்வதற்காக, 2008-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம், பருவநிலை மாற்றம் குறித்த மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், அறிவுசார் வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருதின் ஷாரி இவ்விரு விவகாரங்களை வலியுறுத்தி இருந்தார்.
கடந்த ஆண்டு, 2026-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்திற்கு மாநில அரசாங்கம் 323 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருந்தது.
அதில் 57.6 விழுக்காடு நிர்வாகச் செலவுகளுக்கும், 42.4 விழுக்காடு வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




