ஷா ஆலம், நவ 10 - கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) பெட்டாலிங் ஜெயா, டேசா மெந்தாரியில் (Desa Mentari) கடைசியாகக் காணப்பட்ட 14 வயது சிறுமியைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்கள் உதவுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எம். கீர்த்னா என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுமி, அன்று மாலை 6 மணியளவில் டேசா மெந்தாரியில் உள்ள ஜாலான் பிஜேஎஸ் 6/6டி (Jalan PJS 6/6D) என்ற இடத்தில் கடைசியாகக் காணப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி ஏசிபி சம்சுதீன் மாமட் தெரிவித்தார்.
அவர் காணாமல் போனது குறித்த புகார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.54 மணிக்கு போலீசாருக்குக் கிடைத்தது.
போலீஸ் தகவலின்படி, கீர்த்னா சுமார் 153 சென்டிமீட்டர் உயரமும், மாநிறமும், தோள் வரை நீளமுள்ள கருப்பு முடியும், உருண்டையான மூக்கும், தடிமனான உதடுகளும் கொண்டவர்.
அவர் கடைசியாகக் காணப்பட்டபோது, மஞ்சள் நிற வடிவமைப்பு (pattern) கொண்ட கருப்பு நிற அரைக்கை டி-சர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார்.
அவரைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், 03-7966 2222 என்ற எண்ணில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், 010-397 5016 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் வாங் சுன் வாய் -யைத் தொடர்புகொண்டோ அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்றோ தகவல் தெரிவிக்கலாம்.




