ஷா ஆலாம், நவ 10 : நவம்பர் 4, 5-ஆம் தேதிகளில் புக்கிட் ஜாலீலில் நடைபெற்ற அனைத்துலகப் பாடகர் 'தி வீக்கெண்ட்' இசை நிகழ்ச்சியின் போது, வழிபாட்டு முறைகள் போன்ற கூறுகள் இடம் பெற்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து ஜாகிம் - மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
வெளிநாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கான மத்திய அமைப்புக் குழுவின் (PUSPAL) வழிகாட்டுதல்களின்படி, இந்த இசை நிகழ்ச்சிகள் நிபந்தனைகளுக்கு இணங்கி நடத்தப்பட்டதா என்பதை ஜாகிமின் ஆராய்ச்சிப் பிரிவு சரிபார்த்து வருவதாக பிரதமர்துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி ஹசான் தெரிவித்தார்.
இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்குவதை முற்றிலும் தடை செய்கிறது என்று வலியுறுத்திய அவர், கலை நிகழ்ச்சிகள் மலேசியாவின் இஸ்லாமிய நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் சமய உணர்வுகளுக்கு முரணாக இருக்கக்கூடாது என்று கூறினார்.
உள்ளூர் மற்றும் அனைத்துலக கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நாட்டின் சமய, கலாச்சார உணர்வுகளையும் பொது அமைதியையும் மதிப்பதை உறுதி செய்ய, ஆதாரங்களின் அடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தி வீக்கெண்ட் இசை நிகழ்ச்சியின் சில காட்சிகள் வழிபாட்டு சடங்குகளைப் போல இருந்ததாகச் சில சமூக ஊடகப் பயனர்கள் பதிவுகளைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.




