தகுதி வரம்பு தளர்வு: சிலாங்கூரில் புதிதாக 18,000-க்கும் அதிகமானோருக்கு இலவச நீர் சலுகை

9 நவம்பர் 2026, 2:04 AM
தகுதி வரம்பு தளர்வு: சிலாங்கூரில் புதிதாக 18,000-க்கும் அதிகமானோருக்கு இலவச நீர் சலுகை

ஷா ஆலாம், நவ 9: வருமானத் தகுதி வரம்பு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் 18,091 புதிய விண்ணப்பதாரர்கள், டாருள் ஏசான் நீர் திட்டத்தின் (Skim Air Darul Ehsan -SADE) கீழ் இலவச நீர் விநியோகப் பலன்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

2019 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 12,278 விண்ணப்பங்கள் பெறப்பட்டடன என சிலாங்கூர் நீர் நிறுவனம் (Air Selangor) தெரிவித்தது.

இதில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 74,147 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன் மூலம், சிலாங்கூர் மாநிலத்தில் தகுதியுடைய லட்சக்கணக்கான குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் முதல் 20 கன மீட்டர் தண்ணீரை முற்றிலும் இலவசமாகப் பெற்று வருகின்றனர்.

முன்னதாக, இத்திட்டத்திற்கான தகுதி வரம்பு மாதாந்திர வருமானம் RM5,000 மற்றும் அதற்குக் குறைவாக இருந்த நிலையில், தகுதியுடைய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இந்த வருமான வரம்பை RM6,000 ஆக உயர்த்துவதாக மாநில டத்தோ மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த புதிய தளர்வு அமலாக்கப்பட்ட பிறகு, கூடுதலாக 23,817 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 18,091 குடும்பங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், 2025 செப்டம்பர் 1 முதல் சிலாங்கூர் மாநிலத்தில் புதிய நீர்க் கட்டண மாற்றங்கள் அமலுக்கு வந்த போதிலும், மாதத்திற்கு 20 கன மீட்டர் அல்லது அதற்கும் குறைவாக நீரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் விதிக்கப்படவில்லை.

அவர்களின் நீர்க் கட்டணம் முந்தைய விலையான ஒரு கன மீட்டருக்கு 65 காசுகள் என்ற அளவிலேயே நீடிக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் பயனீட்டாளர்களுக்கு இலவச நீர்ச் சலுகையை வழங்குவதை சிலாங்கூர் நீர் நிறுவனம் தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் வாழும் 96 லட்சத்திற்கும் அதிகமான பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகம் செய்யும் சிலாங்கூர் நீர் நிறுவனம், தேசிய நீர் சேவை ஆணையத்தின் (SPAN) வழிகாட்டுதல்களின்படியே இந்த நீர்க் கட்டண சீரமைப்பை மேற்கொண்டுள்ளது.

தகுதியுடைய பயனீட்டாளர்கள் இந்த இலவச நீர் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ‘Sistem Aplikasi KitaSelangor Sepadu (AKSES)’ என்ற அதிகாரப்பூர்வ செயலி மூலமாகவோ அல்லது அதன் இணையப் பக்கத்தின் (akses.selangor.gov.my/#iltizam-pemberdayaan-rakyat-selangor) வாயிலாகவோ தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.