ஷா ஆலம், நவம்பர் 6 — சிகிஞ்சான் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆடம்பர தங்கும் விடுதி கடந்த ஒரு ஆண்டு காலமாக சட்டவிரோதமாக நீர் குழாய் இணைப்பைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கை தேசிய நீர் சேவைகள் ஆணையம் (SPAN) மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் (Air Selangor) கூட்டு சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சினார் ஹரியான் வெளியிட்ட தகவலின்படி, நெற்பயிர் வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள இந்த தங்கும் விடுதி , சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமாக இருந்தது. அதிகாரிகள், அந்தப் பகுதியில் நீர் அழுத்தம் குறைந்திருப்பதையும், தங்கும் விடுதியின் நீர் பீலின் அளவு நிஜ பயன்பாட்டுடன் பொருந்தாததையும் கவனித்தபோது, சட்டவிரோத இணைப்பை சந்தேகித்ததாக கூறப்பட்டது.
தங்கும் விடுதி வேலியின் வெளிப்புறத்தில் சுமார் 600 மீட்டர் நீளமுள்ள சட்டவிரோத நீர் குழாய் இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக SPAN நிறுவனத்தின் மூத்த தொடர்பு இயக்குநர் டி.எஸ். மொஹ்த் பாஸில் இஸ்மாயில் தெரிவித்தார் .
“அந்த தங்கும் விடுதியின் மாதாந்திர நீர் கட்டணம் ஒரு சில சமயங்களில் RM36 மட்டுமே இருந்தது. 40க்கும் மேற்பட்ட அறைகள், மண்டபம் மற்றும் உணவு இடம் கொண்ட ஒரு தங்கும் விடுதிக்கு இது முற்றிலும் நியாயமற்ற தொகை. உண்மையான பயன்பாட்டின் அடிப்படையில் மாத கட்டணம் சுமார் RM3,000 இருக்க வேண்டியது,” என்று அவர் கூறினார்.
மேலும், விசாரணையில் தங்கும் விடுதியின் வளாகத்துக்குள் மூன்று குழாய்கள் இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் ஒன்று நடவடிக்கை எடுக்கப்படும் முன்பே துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த தங்கும் விடுதியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் RM1 மில்லியன் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அத்துடன், SPAN மற்றும் ஆயர் சிலாங்கூர், சட்டவிரோத இணைப்புகள் செய்த ஷா ஆலாமில் உள்ள டெசா கெமுனிங் மீன்பிடி குளம், மற்றொன்று கிள்ளான் லாஜிஸ்டிக் டெப்போ. மீன்பிடி குளத்தில், நிலத்தடியில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட குழாய் மூலம், தினசரி பெரிய அளவில் நீர் எடுத்துச் செல்லப்பட்டு, குளத்தின் நீரை மாற்றவும் பகுதியை சுத்தப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்தது.
இதேவேளை, கிள்ளான் லாஜிஸ்டிக் டெப்போவில், உரிமையாளர் பதிவு செய்யப்பட்ட மீட்டர் இல்லாமல் சிறப்பு இணைப்புக் கருவி மூலம் நேரடியாக முக்கிய குழாயிலிருந்து நீர் எடுத்ததாகவும் அவர் கூறினார். இத்தகைய தொழிற்சாலை அளவிலான இடங்கள் பெருமளவு நீரைப் பயன்படுத்துகின்றன. அவர்கள் நீரை திருடும்போது, அது நிறுவனங்களுக்கு இழப்பை மட்டுமின்றி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளின் நீரழுத்தத்தையும் பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.




