சமூக ஊடகங்களில் வெறுப்பை விதைக்கும் சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்

7 நவம்பர் 2026, 3:42 AM
சமூக ஊடகங்களில் வெறுப்பை விதைக்கும் சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்

ஷா ஆலாம், நவ 7 : சமூக ஊடகங்களின் மூலமாக வெறுப்பை விதைத்து பிளவை ஏற்படுத்த முயலும் வெளிசக்திகளின் தாக்கத்தை ஒடுக்க, மக்களுக்கு இடையிலான ஒற்றுமையும் புரிந்துணர்வும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டுமென சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட விழாக்களைக் கொண்டாடும் போது, மக்கள் வெளிப்படுத்தும் அமைதியும், ஒற்றுமையும், பல்லின சமூகத்தில் நல்லிணக்கமும் , பரஸ்பர மரியாதையும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது என அவர் கூறினார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 'சிலாங்கூர் ராயல் ஆபீஸ்' (Selangor Royal Office) ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பண்டிகைகள் வெறும் பாரம்பரியமாக மட்டுமின்றி, பல்லின மற்றும் பல சமய மக்கள் வாழும் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு தளமாகவும் அமைகின்றன.

மக்களிடையே பரஸ்பர மரியாதை, ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்வது மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பண்பு ஆகியவை தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டுமென்றாரவர்.

தற்போதைய உலகளாவிய மற்றும் உள்நாட்டு நடப்புகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்கள் வழியாக வெறுப்பைத் தூண்டி, நாட்டின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சகிப்புத்தன்மை ஒரு கேடயமாக விளங்கும் என்று சுல்தான் தெரிவித்தார்.

சுல்தான் ஷராஃபுடின் மற்றும் சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி ஹஜா நொராஷிகின் ஆகியோர் சிலாங்கூர் மற்றும் மலேசியா முழுவதும் உள்ள அனைத்து இந்து மக்களுக்கும் தங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த தீபாவளிப் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தருவதோடு, மலேசியாவின் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.