ஷா ஆலம், செப். 18 - தலைநகர், கம்போங் சுங்கை பாரு மறு மேம்பாடு மிகவும் கவனமுடனும் விவேகத்துடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு மலாய்க்காரர் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியுள்ளார்.
கால மாற்றத்திற்கேற்ப அப்பகுதி மேம்படுத்தப்படுத்துவதில் எந்த தடையும் கிடையாது எனக் கூறிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, ஆயினும் நிபந்தனைகள் தெளிவானதாகவும் மலாய்க்காரர்களுக்கு சாதகமான முறையிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவ்விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் முன்வைக்கும் பரிந்துரையில் உள்ளடங்கிய அம்சங்கள் கம்போங் பாரு பகுதியின் தொடக்க வரலாற்றையும் அதன் பாரம்பரியத்தையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆகவே, கம்போங் பாருவை மேம்படுத்துவது தொடர்பான எந்த முயற்சியும் அல்லது முடிவும் தற்போதைக்கும் நீண்ட கால அடிப்படையிலும் மலாய்க்காரர்களின் நலனைக் கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1899ஆம் ஆண்டு விவசாய நோக்கத்திற்காக மலாய்க்காரர் குடியேற்றப் பகுதியாகக் கம்போங் பாரு தோற்றுவிக்கப்பட்டதை சுல்தான் ஷராபுடின் நினைவுக் கூர்ந்தார்.
தனது தந்தை சிலாங்கூர் ராஜா மூடாவாக இருந்த போது தாம் கம்போங் பாருவில் தங்கி அங்குள்ள ராஜா மூடா தேசியப் பள்ளியில் கல்வி பயின்றதை கிள்ளான், இஸ்தானா ஆலம் ஷா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுல்தான் சுட்டிக்காட்டினார்.
அங்குள்ள திடல் கடந்த 1969ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தின் போது மலாய்க்காரர்களுக்கு தஞ்சம் அளிக்கும் இடமாக விளங்கியதோடு மெர்டேக்கா அரங்கம் கட்டப்படுவதற்கு முன்னர் அத்திடல் சிலாங்கூர் கால்பந்து குழுவின் பயிற்சிக்கான இடமாக விளங்கியது என்றும் அவர் கூறினார்.
அங்குள்ள கிளப் சுல்தான் சுலைமான் பாரம்பரியக் கட்டிடம் இன்னும் சிலாங்கூர் மாநிலத்திற்குச் சொந்தமானதாக உள்ளது. அது மட்டுமல்ல, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் சிலாங்கூர் மந்திரி புசார் மற்றும் மாநில அரசு செயலாளரின் இல்லங்கள் அங்குதான் இருந்தன என்றார் அவர்.