கோலாலம்பூர், நவ 7 : சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சியை குறிக்கும் வகையில், சிலாங்கூர் சுல்தான் அறக்கட்டளை (Yayasan Sultan Selangor ) தொடங்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் அரச தொண்டு இரவு விருந்து நிகழ்ச்சியில், சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரீஸ் ஷா , அந்த அறக்கட்டளையை அறிமுகம் செய்து வைத்தார்.
அந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிகின் , சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா, அவரது துணைவியார் டத்தின் படுகா ஸ்ரீ அஃப்சா ஃபடினி அப்துல் அசீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரச தொண்டு நிதியுதவி விருந்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தெங்கு அமீர் ஷா, அந்த அறக்கட்டளை தமது தந்தையின் 25 ஆண்டுகால வெள்ளி விழா ஆட்சி கொண்டாட்டத்தின் நினைவாக வழங்கப்படும் ஒரு அர்த்தமுள்ள பரிசு என்றும், இது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் உரையாற்றினார்.
"அரியணையில் 25 ஆண்டுகள் என்பது வெறும் சாதனை மட்டுமல்ல. அது சிலாங்கூர் மக்கள் மீது காட்டப்பட்ட கால் நூற்றாண்டு கால அர்ப்பணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் அசைக்க முடியாத அக்கறையைக் குறிக்கிறது."
"இதை ஒரு கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து பயனளிக்கும் ஒரு பரிசின் மூலம் இதனை நினைவு கூர்வது மிகவும் பொருத்தமானது" என்று இளவரசர் கூறினார்.
சுல்தான் சிலாங்கூர் அறக்கட்டளை சமூக நலன், கல்வி மற்றும் உதவித்தொகை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு, மற்றும் அவசரக்கால உதவி ஆகிய நான்கு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுமெனன தெங்கு அமீர் ஷா தெரிவித்தார்.
இந்த அறக்கட்டளை, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும், சமூக நலனை ஆதரிப்பதற்கும் ராஜா மூடா சிலாங்கூர் அறக்கட்டளை (Yayasan Raja Muda Selangor) மற்றும் சிலாங்கூர் இளைஞர் சமூகம் (Selangor Youth Community) ஆகிய அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறக்கட்டளையின் கல்வித் திட்டம் குறித்துப் பேசிய தெங்கு அமீர் ஷா, சுல்தான் சிலாங்கூர் கல்வி உதவித்தொகையைப் பெற்ற முதல் மாணவியான அதிகா நூர் அஸ்லான், கடந்த செப்டம்பர் மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை (Public Policy) துறையில் தனது முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளார் என்று கூறினார்.
தகுதியுள்ள மேலும் பல மலேசிய இளைஞர்கள் உலகெங்கிலும் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தங்களது மேற்படிப்பைத் தொடர இந்த அறக்கட்டளையின் ஆதரவைப் பயன்படுத்திப் பயனடைவார்கள் என்று தங்களின் நம்பிக்கையை இளவரசர் வெளிப்படுத்தினார்.
இந்தத் தொண்டு விருந்து நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதி, கடந்த 25 ஆண்டுகளில் சுல்தான் ஷராஃபுடின் மற்றும் சிலாங்கூர் அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெங்கு அமீர் ஷா தெரிவித்தார்.





