சிலாங்கூர் இளவரசர் பங்கேற்ற 'நேவி ரன் 2026'; 15,000 பங்கேற்பாளர்களை இணைத்தது

2 ஆகஸ்ட் 2026, 4:20 AM
சிலாங்கூர் இளவரசர் பங்கேற்ற 'நேவி ரன் 2026'; 15,000 பங்கேற்பாளர்களை இணைத்தது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 — இன்று இங்குள்ள கோலாலம்பூர் மாநகர் மன்ற (DBKL) சதுக்கத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்த 'நேவி ரன் 2026' (Navy Run 2026) ஓட்டப்பந்தயத்தை, சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா, அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தெங்கு அமீர் ஷாவும் இந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் இணைந்து வெற்றிகரமாக ஓட்டத்தை நிறைவு செய்தார்.

இந்த ஓட்டப்பந்தயத்தில் அரச மலேசிய கடற்படை தளபதி லெப்டினன்ட் அட்மிரல் டான் ஸ்ரீ டாக்டர் சுல்ஹெல்மி இத்னைன், கோலாலம்பூர் மன்றத் தலைவர் டத்தோ ஃபட்லுன் மாக் உஜுத், லுமுட் நேவல் ஷிப்யார்ட் (Lumut Naval Shipyard Sdn Bhd) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசார் ஜுமாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நேரடி ஒளிபரப்பு மூலம் நடத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், பேராக் மாநிலத்தில் உள்ள லுமுட் கடற்படைத் தளம்; பகாங்கில் உள்ள குவாந்தான் மற்றும் சபாவில் உள்ள கோத்தா கினபாலு ஆகிய இடங்களைச் சேர்ந்த கடற்படைப் பணியாளர்களும் ஒரே நேரத்தில் தங்களின் தளங்களில் இருந்து பங்கேற்றதாக அரச மலேசிய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்தது.

"நேவி ரன் என்பது வெறும் ஓர் ஓட்டப்பந்தய நிகழ்வு மட்டுமல்ல, இது அரச மலேசிய கடற்படைக்கும் மலேசிய மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையின் அடையாளமாகும்.

பொதுமக்கள் கடற்படையை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ளும்போது, நாட்டின் வலிமையின் அரணாக விளங்கும் நம்பிக்கை, ஆதரவு மற்றும் தேசபக்தி ஆகியவை மலர்கின்றன," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தலைநகரைச் சுற்றி ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்ட இந்த மெதுவோட்ட நிகழ்ச்சி, 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நடத்தப்படும் நான்காவது நிகழ்ச்சியாகும்.

இதுவே இதுவரை பதிவான மிக அதிகப்படியான பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை என்றும் மலேசிய அரச கடற்படை தெரிவித்தது.

ஓட்டப்பந்தயத்தைத் தவிர, ஏரோபிக்ஸ் பயிற்சி, அரச மலேசிய கடற்படையின் மத்திய இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, சத்தமில்லா அணிவகுப்பு (silent kawad) செயல்விளக்கம், கடற்படை வாழ்க்கை முறை சார்ந்த தொழில் கண்காட்சி மற்றும் பங்கேற்பாளர்களுக்கான அதிர்ஷ்டக் குலுக்கல் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நடவடிக்கைகளுடன் இந்தத் திட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.