கோலாலம்பூர், நவ 4 : மலேசியாவில், கூகுள் நிறுவனத்தின் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM60.9 பில்லியன்) முதலீடு அடுத்த ஈராண்டுகளில் ஆண்டுதோறும் 37,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் ரூத் போரட் (Ruth Porat)தெரிவித்தார்.
2027-2028 ஆம் ஆண்டுக்கான இந்த முதலீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஆண்டுதோறும் சராசரியாக 1.1 பில்லியன் அமெரிக்க டாலரை பங்களிக்கும் என்று குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தி ல் நேற்று நடைபெற்ற 'மந்தாப் மலேசியா பெர்சாமா ஏஐ' (Mantap Malaysia Bersama AI) நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக, இதன் கட்டுமானக் காலத்தில் உருவாக்கப்படும் 37,000 வேலை வாய்ப்புகளில் சுமார் 6,000 வேலைகள் நேரடியாகக் கட்டுமானத் துறையைச் சார்ந்தவையாக இருக்கும் என்றும், திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 378 மில்லியன் அமெரிக்க டாலர் தொழிலாளர் வருமானமாக ஈட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் தரவு மையங்கள் மற்றும் புதிய வளாகங்கள் முழுமையாகச் செயல்படத் தொடங்கிய பிறகு, ஆண்டுதோறும் 9,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து தக்கவைக்கப்படும்.
இந்த வேலைகளுக்கான சராசரி ஊதியம் நாட்டின் தேசிய சராசரி ஊதியத்தை விட 45 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கூகுள் நிறுவனம் மலேசியாவின் கட்டுமான, பொது பொறியியல், நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளது.
இது உள்ளூர் விநியோகிப்பாளர்கள் தங்களின் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொண்டு அனைத்துலக சந்தையில் போட்டியிட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திறன் மேம்பாட்டைப் பொறுத்தவரையில், கூகுள் நிறுவனம் 2027 முதல் 2031 ஆம் ஆண்டிற்குள் சுமார் 800,000 மலேசியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும் டிஜிட்டல் திறன் பயிற்சிகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்டு நான்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்த முதலீடுகள் மலேசியாவை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு 'ஏஐ நாடாக' மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் என இலக்கவியல் அமைச்சர் கோவிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
மலேசியா வெறும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக மட்டும் இல்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








