கோலாலம்பூர், நவ.4: எதிர்வரும் தீபாவளி விடுமுறைக் காலத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், விமான நிலையங்களில் செக்-இன் கவுன்டர்கள், பாதுகாப்புச் சோதனைப் பகுதிகள் மற்றும் குடிநுழைவுச் சோதனை மையங்களில் வழக்கத்தைவிட நீண்ட வரிசைகள் ஏற்படக்கூடும் என ஏர் ஏசியா நிறுவனம் எச்சரித்துள்ளது.
விமானப் பயணிகள் கடைசி நேர நெரிசல் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க தங்களது பயண நேரத்திற்கு முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வருமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்கள் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவும், வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்கள் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்தைச் சென்றடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 2 (KLIA Terminal 2)-இல் உள்நாட்டு விமானங்களுக்கான செக்-இன் கவுன்டர்கள், விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மூடப்படும் என ஏர் ஏசியா குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், மலேசியாவின் பிற விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களுக்கான செக்-இன் கவுன்டர்கள் புறப்படும் நேரத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக மூடப்படும்.
பயணிகள் தங்களது விமானத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் பயணம் தொடர்பான அறிவிப்புகளை AirAsia MOVE செயலி வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே இணையவழி செக்-இன் செய்துள்ள பயணிகள், விமான நிலையங்களில் உள்ள சுயசேவை இயந்திரங்களைப் பயன்படுத்தி தங்களது பயணப் பைகளுக்கான அடையாளச் சீட்டுகளை அச்சிட்டுக்கொள்ளலாம். அதன்பின்னர், சுயசேவைப் பயணப் பைகள் ஒப்படைக்கும் கவுன்டர்களில் அவற்றை ஒப்படைக்கலாம்.
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தாங்கள் செல்லும் நாடு மற்றும் இடைநிறுத்தப் பயணம் மேற்கொள்ளும் நாடுகளுக்கான நுழைவு விதிமுறைகள், விசா உள்ளிட்ட தேவையான பயண ஆவணங்களை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, விசா அல்லது மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorisation) தேவைப்படும் நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு உதவும் வகையில், ஏர் ஏசியா தனது Auto Visa Check வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆவணங்கள் வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டதும், மின்னணு போர்டிங் அனுமதிச் சீட்டு உடனடியாக வழங்கப்படும்.
ஒருவேளை ஆவணச் சரிபார்ப்பு வெற்றிபெறாவிட்டால், விமான நிலையத்தின் செக்-இன் கவுன்டருக்குச் சென்று அதிகாரிகள் மூலம் நேரடியாக ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

நடமாட்டக் குறைபாடு உள்ளவர்கள், 24 மாதங்களுக்குக் குறைவான குழந்தையுடன் பயணம் செய்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் துணையின்றித் தனியாகப் பயணம் செய்யும் சிறுவர்கள் ஆகியோருக்கு மட்டுமே கவுன்டர் செக்-இன் சேவை வழங்கப்படும்.
இதற்கிடையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 2-இல் குடிநுழைவுச் சோதனைகளை விரைவாக நிறைவு செய்வதற்காக, மலேசியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் MyNIISe அல்லது MyBorderPass செயலிகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் ஏர் ஏசியா பரிந்துரைத்துள்ளது.
பயணிகள் AirAsia MOVE செயலியில் வழங்கப்படும் மின்னணு போர்டிங் அனுமதிச் சீட்டுகளையும் பயன்படுத்தலாம்.
இருப்பினும், சில விமான நிலையங்களில் ஆவணச் சரிபார்ப்புக்காகப் பயணிகள் தங்களது போர்டிங் அனுமதிச் சீட்டை விமான நிலைய கவுன்டரில் அச்சிட்டுப் பெற வேண்டிய கட்டாயம் இருக்கலாம் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.







