ஷா ஆலாம், நவ.3: தாப்பா – கேமரன் மலை பிரதான சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, இன்று காலை அப்பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பத்து 22 பகுதியில் காலை 10.50 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவினால் மரங்கள் வேரோடு சாய்ந்து சுமார் 40 மீட்டர் தூரத்திற்குச் சாலையை மூடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், பிரபல சுற்றுலாத் தலமான கேமரன் மலைக்குச் செல்லும் பிரதான சாலையில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.
பேராக் மாநில உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்துக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் நிசார் ஜமாலுடின் இதனைத் தெரிவித்தார்.
நிலச்சரிவைத் தொடர்ந்து சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது வாகனங்கள் செல்வதற்கு ஒரே ஒரு பாதை மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கிடையில், நிலச்சரிவால் மரங்கள் சாய்ந்து விழுந்தபோதிலும், பொதுப்பணித் துறையின் (JKR) ஆய்வில் அச்சாலை வாகனப் போக்குவரத்துக்குப் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.







