ஷா ஆலாம், நவ 3 : பிரபல மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் போவதில்லை என்றும், அவரை ஒப்படைப்பது தொடர்பாக எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்றும் மலேசிய அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
2010 -ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட மலேசியா-இந்தியா நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் 6வது பிரிவு மற்றும் 1992-ஆம் ஆண்டு நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதனிடையே, டாக்டர் ஜாகிர் நாயக் தொடர்பாக இந்தியாவிடமிருந்து இதுவரை எந்தவொரு புதிய நாடுகடத்தல் கோரிக்கையும் மலேசியாவிற்கு விடுக்கப்படவில்லை.
இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ கோரிக்கை இதற்கு முன்னர் 2018 ஜனவரி 19-ஆம் தேதி பெறப்பட்டது.
அதே நேரத்தில் அதை மறுபரிசீலனை செய்யக் கோரும் தூதரகக் குறிப்பு 2020 மே 29 -ஆம் தேதி பெறப்பட்டது என்று அவர் கூறினார்.
"டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு நாடுகடத்தப் போவதில்லை என மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. எனவே, அவரை நாடுகடத்துவது குறித்து எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை," என்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் கோரப்பட்ட டாக்டர் ஜாகிர் நாயக்கின் நாடுகடத்தல் கோரிக்கையின் தற்போதைய நிலை மற்றும் சமீபத்திய அதிகாரப்பூர்வ கோரிக்கை குறித்து விளக்கம் கேட்ட டத்தோ டாக்டர் அஹ்மாட் மர்சூக் ஷாரியின் (பிஎன்-PN பெங்கலான் செப்பா) கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
டாக்டர் ஜாகிர் நாயக் ஜூலை 2016-இல் இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில் குடியேறினார். அதன் பின்னர், இந்திய அரசாங்கம் அவரை நாட்டிற்கு திருப்பி அழைத்துச் செல்வதற்காக 2018 ஜனவரி 19 -ஆம் தேதி அதிகாரப்பூர்வ நாடு கடத்தல் கோரிக்கையைச் சமர்ப்பித்தது.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், 1992-ஆம் ஆண்டு நாடு கடத்தல் சட்டம் மற்றும் மலேசியா-இந்தியா நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் 6(1)(a) பிரிவின்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு நியாயமான விசாரணை கிடைக்காமல் போகும் அபாயம் இருந்தாலோ, குறிப்பிட்ட காரணங்களால் ஒடுக்குமுறைக்கு ஆளாக நேரிட்டாலோ, நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரிக்க சில நிபந்தனைகள் வழிவகை செய்கின்றன என்று அரசாங்கம் விளக்கியிருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம், புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்திய சந்திப்பின் போதும் டாக்டர் ஜாகிர் நாயக் நாடு கடத்தல் விவகாரம் விவாதிக்கப்பட்டது.
அவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய அன்வார், எனினும் மலேசிய சட்டத்தின் இறையாண்மை கொள்கையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என வலியுறுத்தியிருந்தார்.







