கோலாலம்பூர், நவ 2 : மலேசியா அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவு கையிருப்பைக் கொண்டிருப்பதால், அவசரகால உணவு சேமிப்புக்கான எந்தவொரு தேவையும் தற்போது இல்லை என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மாட் சாஹித் ஹாமிடி தெரிவித்தார்.
உலகளாவிய அச்சுறுத்தல்கள் மற்றும் அவசரநிலைகளைக் கருத்தில் கொண்டு தங்களின் குடிமக்களை உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்குமாறு சில நாடுகள் அறிவுறுத்தியுள்ள அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூரில், மலேசியா- சீனா இடையிலான முதலீடு,வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மீதான கூட்டுறவு கூட்டத்தில் பங்கேற்றப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
மலேசியா தற்பொழுது எந்தவொரு அவசரகால நிலையிலும் இல்லை என்றும், அத்தகைய சூழ்நிலையிலிருந்து நாடு வெகு தொலைவில் உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆயுத மோதல்கள், தீவிர வானிலை, மின் தடை மற்றும் இணையத் தாக்குதல்கள் போன்ற உலகளாவிய அச்சுறுத்தல்கள் காரணமாக பிரான்ஸ், பிரிட்டன் உட்பட குறைந்தபட்சம் 33 நாடுகள் தங்களின் குடிமக்களைக் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்குமாறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




