ஷா ஆலாம், நவ 2 : மலேசியாவில் நீண்ட வரலாற்றைக் கொண்ட குதிரையேற்ற விளையாட்டுகளுக்கு, செப்பாங், சைபர்ஜெயாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சிலாங்கூர் அரச போலோ- குதிரையேற்ற கிளப் (Royal Selangor Polo and Equestrian Club) ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வரவுள்ளது.
போலோ மற்றும் குதிரையேற்ற விளையாட்டுகள் உயர் நிலை மக்களுக்கானது என கருதப்பட்டாலும், பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் இதில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கிளப் சிறப்பு உறுப்பினர்களுக்கு மட்டுமான ஒரு தளம் அல்ல என்றும், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொது வசதி என்று அக்கிளப்பின் தலைவர் டத்தோ சையத் புத்ரிஸ் புத்ரா ஜமாலுல்லைல் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ்-சின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், 28 ஹெக்டேர் பரப்பளவில் 2024 நவம்பரில் அக்கிளப்பின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இவ்வாண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு 1 கிலோமீட்டர் மணல் தடம் (sand track), 136 குதிரை லாயங்கள் (stables), உட்புற மற்றும் வெளிப்புற மைதானங்கள் மற்றும் 8 பிக்கிள்பால் (pickleball) ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயன்படுத்திய அளவுக்கு மட்டும் பணம் செலுத்தும் (pay-per-use) முறையில் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கிளப்பின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் இர்மோஹிசாம் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குதிரையேற்றத்தைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் சிறப்பு வகுப்புகளும், போலோ விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக ஒரு 'போலோ அகாடமி'யும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையைத் தாண்டி, குதிரை பராமரிப்பு மற்றும் லாய மேலாண்மை போன்ற பிரிவுகளில் திறன் சார்ந்த தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) வாய்ப்புகளையும் இந்த கிளப் வழங்குகிறது.
இதற்காக மலேசியா புத்ரா பல்கலைகழகம் போன்ற சிலாங்கூர் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தொழில்துறை பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோலா குபு பாருவில் உள்ள பிரேசர் வேலி போலோ கிளப் மற்றும் இந்த புதிய சிலாங்கூர் அரச போலோ- குதிரையேற்ற கிளப் ஆகியவற்றின் மூலம், அனைத்துலக அளவில் போட்டியிடக்கூடிய புதிய விளையாட்டுத் திறமையாளர்களை சிலாங்கூர் உருவாக்கவுள்ளது.






