செலாயாங், அக் 31 - பத்து மலை, தாமான் ரிம்பா புக்கிட் லாகோங்கில் (Taman Rimba Bukit Lagong) பன்றிப் பண்ணை இருப்பதாகப் பரவிய செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று செலாயாங் நகராட்சி மன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகமான 'த்ரெட்ஸ்' தளத்தில் பரப்பப்பட்ட அந்த அவதூறு செய்தி குறித்து செலாயாங் நகராட்சி மன்றம், போலீஸ் மற்றும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
புக்கிட் லாகோங் பகுதியில் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பது ட்ரோன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட வான்வழி கண்காணிப்பு மற்றும் நேரடி சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரியின் விளக்கத்தின்படி, அந்தப் பகுதியில் பன்றிப் பண்ணைகளுக்குப் பதிலாக இரு மாட்டுப் பண்ணைகள் மட்டுமே இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும், ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை செலாயாங் நகராட்சி மன்றத்தின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் மட்டுமே தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.




