கோலாலம்பூர், அக் 30- மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு , பாதுகாப்பு அமைப்பின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்த டத்தோஸ்ரீ முஹமட் சுஹைலி முஹமட் சைன், மீண்டும் போலீஸ் துறைக்குத் திரும்பிய பின்னர் அவருக்கு எந்தப் பதவி வழங்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முஹமட் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சிக்குக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.
டத்தோஸ்ரீ சுஹைலியின் தற்போதைய பதவி நியமனம் நாட்டின் மாமன்னரால் செய்யப்பட்டது என்பதால், அவரது பதவிக் காலத்தைக் குறைத்து அவரை மீண்டும் போலீஸ் துறைக்கு அனுப்ப மாமன்னரின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அவசியமாகும்.
மாமன்னரின் அந்த ஒப்புதல் கிடைக்கும் வரை அவரது அடுத்தகட்டப் பதவி குறித்து எதையும் உறுதிப்படுத்த முடியாது என்றும், இருப்பினும் அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் நிச்சயமாக போலீஸ் துறைக்கே திரும்புவார் என்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் தெளிவுபடுத்தினார்.
அவர் மீண்டும் போலீஸ் துறைக்குத் திரும்பியதும், பொதுச் சேவை ஆணையம் மற்றும் போலீஸ் ஆணையத்தின் விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
முன்னதாக,டத்தோஸ்ரீ சுஹைலியை மீண்டும் போலீஸ் துறைக்கு அனுப்ப உள்துறை அமைச்சு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.
சுஹைலி கடந்த 2025 ஜூலை 1 முதல் 2027 ஜூன் 30 வரையிலான ஈராண்டு காலத்திற்கு மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு , பாதுகாப்பு அமைப்பின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதற்கு முன்பாக அவர் ஆகஸ்ட் 2023 முதல் கூட்டரசு குற்றவியல் விசாரணைத் துறையின் (CID) இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 28 -ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ சுஹைலி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.




