இந்தோனேசியாவில் கெட்டமின் பறிமுதல் : நிறுவன இயக்குநர், தரகர் கைது

27 அக்டோபர் 2026, 7:37 AM
இந்தோனேசியாவில் கெட்டமின் பறிமுதல் :  நிறுவன இயக்குநர், தரகர் கைது

ஷா ஆலாம், அக் 27 : இந்தோனேசிய அதிகாரிகளால் கடந்த வாரம் 1.16 டன் கெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எம்டி குளோபல் 168 கப்பலின் அசல் உரிமையாளர் உட்பட இரு மலேசிய ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

45 மற்றும் 44 வயதுடைய அந்த இரு உள்ளூர் ஆடவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.

"கைது செய்யப்பட்டவர்களில் 45 வயதுடையவர் எம்டி குளோபல் 168 கப்பலின் அசல் உரிமையாளரான நிறுவன இயக்குநர் ஆவார். 44 வயதுடையவர் அந்தக் கப்பலை விற்பனை செய்த முகவர் அல்லது தரகர் ஆவார்.

தொடக்க விசாரணையில், அந்தக் கப்பல் கடந்த ஏப்ரல் மாதம் வாங்கப்பட்டு, பின்னர் லாபம் ஈட்டும் நோக்கில் புதுப்பிக்கப்பட்டு மறுவிற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது.

அதன்பின், ஜூன் 28-ஆம் தேதி அந்த முகவர் மூலமாக மியன்மார், யாங்கோனில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு எம்டி குளோபல் 168 கப்பல் விற்கப்பட்டது," என்று அவர் இன்று தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக அவ்விரு ஆண்களும் நேற்று முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹுசைன் கூறினார்.

மேலும், இச்சம்பவத்தின் விசாரணைக்கு உதவுவதற்காக சிங்கப்பூர், தைவான் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த மேலும் மூன்று நபர்களைப் போலீசார் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.