ஷா ஆலாம்,அக் 27 - பொது இடங்களில் சிறிய அளவிலான குப்பைகளை வீசிய குற்றத்திற்காக மொத்தம் 4 லட்சத்து 67,140 ரிங்கிட் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது; அத்துடன் 3,638 மணி நேரம் சமூக சேவைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் ஏழு மாநிலங்களில் இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 8,960 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இந்த அமலாக்க நடவடிக்கைகள் மூலம், 17, 145 குற்ற அறிவிப்பு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என நேற்று மக்களவையில் 2027 வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தூய்மை என்பது ஒரு நாட்டின் நாகரிகத்தை பிரதிபலிக்கிறது. நமது நாடு சுத்தமாகவும், நீடித்த நிலைத்தன்மையுடனும், கண்ணியத்துடனும் திகழ்வதை உறுதி செய்வதே அமைச்சின் நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.
மேலும், அடுத்த 2027 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்கு நாட்டின் சிறந்த தோற்றத்தைக் காட்டுவதற்காக இந்தத் தூய்மை அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, உள்ளூர் வியாபாரங்களை வெளிநாட்டினர் ஆக்கிரமிக்கும் பிரச்சினை குறித்துப் பேசிய அமைச்சர், இதில் தங்களது அமைச்சு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
உள்ளூர் வியாபாரிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வணிக உரிம நிபந்தனைகளை உறுதி செய்யவும் கடந்த மூன்று ஆண்டுகளில் 10,248 ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டு, 28,401 வணிக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமைச்சுடன் இணைந்து குடிநுழைவுத் துறை , போலீஸ் மற்றும் உள்நாட்டு வாணிக - வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சு ஆகியவைகள் இணைந்து நாடு முழுவதும் நடத்திய சோதனைகளில், மொத்தம் 100,366 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதில் 65,023 அபராதங்களும் , 6,942 பறிமுதல் மற்றும் வியாபாரத் தளங்களை இடிக்கும் நடவடிக்கைகளும் அடங்கும்.
"உள்ளூர்வாசிகள் தங்களின் வணிக உரிமங்களை வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடும் 'அலி பாபா' போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால், ஊராட்சி மன்றங்கள் அவர்களின் உரிமங்களை உடனடியாக ரத்து செய்யத் தயங்காது," என்று ஙா கோர் மிங் எச்சரித்தார்.
இவ்வேளையில், உள்ளூர் சிறுதொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தங்களது அமைச்சின் கீழ் இவ்வாண்டில் 60 மில்லியன் ரிங்கிட் செலவில் 107 'மடானி கடைகள்' (Gerai MADANI) கட்டப்பட்டு, பழமையான பொதுச் சந்தைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் வரும் 2027 ஆம் ஆண்டில் 120 மில்லியன் ரிங்கிட் இரட்டிப்பு ஒதுக்கீட்டுடன் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் வசதியான வியாபாரச் சூழல் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.





