ஷா ஆலம், அக் 26: ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் இரு கிலோ கிராம் கோக்கைனுடன் கைது செய்யப்பட்ட சீன நாட்டவர், பினாங்கிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அந்தப் போதைப்பொருளைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி ஹாங்காங் சுங்க- கலால் துறையினரால் 25 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆரம்பகட்ட தகவல் கிடைத்துள்ளதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.
அந்த நபர் பினாங்கிலிருந்து கேத்தே பசிபிக் CX622 விமானம் மூலம் ஹாங்காங் சென்றடைந்ததாக அவர் கூறினார்.
சந்தேக நபரின் பதிவு செய்யப்பட்ட பயணப் பையை சோதித்தபோது, கோக்கைன் என சந்தேகிக்கப்படும் இரு கிலோ போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
"ஆரம்பகட்ட விசாரணையில், அந்நபர் மலேசியாவில் மூன்று நாட்கள் தங்கியிருந்ததும், பினாங்கிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து இந்தப் போதைப்பொருளைப் பெற்றதும் தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள் தொடர்பான வேலைக்காக அவருக்கு RMB2,000 (RM1,200) வெகுமதி மென உறுதியளிக்கப்பட்டது," என ஹரியான் மெட்ரோ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
கைதான் நபரின் பயணக் கடப்பிதழ் கடந்த அக்டோபரில்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில் வேறு எந்த பயணப் பதிவுகளும் இல்லை என்றும் ஹுசைன் கூறினார்.
இதற்கு முன்னதாக, அந்நபர் கடந்த வியாழக்கிழமை ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்ததும் ஹாங்காங் சுங்க- கலால் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதுவரை நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை, சந்தேக நபர் ஹாங்காங்கிற்குப் புறப்படுவதற்கு முன்பு பினாங்கில் இருந்தபோதுதான் அந்த போதைப்பொருள் பெற்றார் என்ற அடிப்படையிலே தொடர்கிறது.




