கோலாலம்பூர், அக் 25 : மாணவி ஒருவருக்குத் தலைமை ஆசிரியர் தவறான முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுவது குறித்து பேராக் மாநில கல்வித் துறை விசாரணை நடத்தி வருகிறது.
'திரெட்ஸ்' (Threads) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியான ஒரு பதிவில், தெலுக் இந்தானில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவிக்கு "ஐ லவ் யூ" என்பது உள்ளிட்ட தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று அந்தத் தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்துக் கேள்வி எழுப்பிய வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபத்லினா சிடெக், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு மாநில கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
"விசாரணையின் முடிவுகள் வெளிவரும் வரை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பாகன் டத்தோ மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்," என்று அவர் தெரிவித்தார்.





