ஜொகூர் பாரு, அக் 24: தம்போயில் உள்ள மக்கள் வீடமைப்புத் திட்ட (PPR) அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதலாம் ஆண்டு பயிலும் அந்த மாணவன், தனது வீட்டின் வெளிப்பகுதியில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவனின் தாய் வீட்டிற்குள் இருந்ததாகவும், லாரி உதவியாளராகப் பணிபுரியும் தந்தை வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
நான்கு உடன்பிறந்தவர்களில் இரண்டாவதான அச்சிறுவனுக்கு நேர்ந்த இந்த விபரீதம் குறித்து, அவனது நண்பர்கள் வந்து கூறிய பிறகே தாயாருக்குத் தெரியவந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மேலதிக விசாரணைக்கு உதவும் வகையில் சிறுவன் பயன்படுத்திய சைக்கிளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு (HSA) அனுப்பி வைக்கப்பட்டது.







