கோலாலம்பூர், டிச 26- கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு (PGO) இன்று காலை 7.18 மணியளவில் 999 அமைப்பு மூலம் தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாக மூத்த தீயணைப்பு அதிகாரி II ஃபத்தி கமால் முகமட் அஸ்ரி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
"தீ விபத்தில் சிக்கிய 58 வயதுடைய ஆண் ஒருவரும், 82 வயதுடைய மூதாட்டி ஒருவரும் கழிப்பறையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சுகாதார அமைச்சகத்தால் (KKM) உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
"இதையடுத்து, செந்துல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையமும், கோம்பாக் செலாத்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீர்ர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்."
"தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 20 x 20 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீயை அணைப்பதற்கும், சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கும் தீயணைப்பு வாகனத்தின் பம்புகளில் இருந்து ஆறு குழாய்கள் மூலம் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காலை 7.51 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 40 விழுக்காடு சேதம் ஏற்பட்ட நிலையில், காலை 8.27 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு விசாரணைப் பிரிவு இன்னும் கண்டறிந்து வருகிறது.


