ஷா ஆலாம், அக் 21 : இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தகுதியானவர்களுக்கு தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள, மொத்தம் 26,354 'ஜோம் ஷாப்பிங்' (Jom Shopping) பற்றுச் சீட்டுகள் (வவுச்சர்கள்) விநியோகிக்கப்படவுள்ளன.
அதற்காக 52 லட்சத்து 70,000 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அக்டோபர் 17 முதல் நவம்பர் 7 வரை அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுவதாக வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு தெரிவித்தார்.

விநியோக முறை கடந்த ஆண்டுகளைப் போலவே தொடர்கிறது. இந்த வவுச்சர்கள் அந்தந்த சட்டமன்ற அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக தகுதியானவர்களுக்கு விநியோகிக்கப்படும்.
"இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கான 'ஜோம் ஷாப்பிங்' திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடு 52 லட்சத்து 70,800 ரிங்கிட்டாகும்.
இதில் சட்டமன்றத் தொகுதிகளுக்காக 48 லட்சம் ரிங்கிட்டும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினருக்கு கூடுதல் ஒதுக்கீடான 4 லட்சத்து 70 ஆயிரத்து 800 ரிங்கிட்டும் அடங்கும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இந்த வவுச்சர், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக, 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, இவ்வாண்டு 'ஜோம் ஷாப்பிங்' திட்டத்திற்காக மாநில அரசு 1 கோடியே 84 லட்சத்து 8,000 ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 20 லட்சம் ரிங்கிட் அதிகமாகும்.
இந்த ஒதுக்கீடு, ஹரி ராயா பெருநாள், சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு 92 ஆயிரத்து 400 பேருக்கு வழங்கப்படுகிறது.
அத்துடன்,மாநில அரசு 8,317 ராணுவ வீரர்களுக்குத் தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள 'ஜோம் ஷாப்பிங் ஹரி பாஹ்லாவான் நெகாரா' (Jom Shopping Hari Pahlawan Negara) வவுச்சரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு 17 லட்சம் ரிங்கிட்டாகும்.







