ஷா ஆலாம், அக் 20 : தஞ்சோங் காராங் (Tanjung Karang) கடல் பகுதி வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 57 இந்தோனேசிய நாட்டவர்களின் முயற்சியை மலேசிய கடற்படை அமலாக்கத் துறையினர் இன்று அதிகாலை முறியடித்தனர்.
தஞ்சோங் காராங்கிற்கு தென்மேற்கே சுமார் 0.7 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நகர்ந்த பதிவு எண் இல்லாத சிவப்பு மற்றும் கருப்பு நிற மரப் படகு ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டதாக, கடற்படை அமலாக்கத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கேப்டன் அப்துல் முஹைமின் முஹம்மது சல்லேத் தெரிவித்தார்.

அந்தப் படகை 23 வயதுடைய படகோட்டி (Tekong) மற்றும் 18, 28 வயதுடைய இரு இந்தோனேசிய உதவியாளர்கள் இயக்கியது சோதனையில் தெரிய வந்தது.
மேலும், அந்தப் படகில் உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 31 ஆண்கள் மற்றும் 23 பெண்கள் உட்பட மொத்தம் 54 இந்தோனேசிய நாட்டவர்கள் இருந்தனர்.
கைது செய்யப்பட்ட சிலரிடம் பயணக் கடப்பிதழ் இருந்தபோதிலும், அவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத வழித்தடங்கள் வழியாக நாட்டிற்குள் நுழைய முயன்றதால் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அது குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் 2007 ஆள் கடத்தல் மற்றும் கடத்தலுக்கு எதிரான சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேற் நடவடிக்கைகளுக்காக புலாவ் இண்டாவில் (Pulau Indah) உள்ள கடல் போலீஸ் படையின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.





