சிரம்பான், செப். 17 - சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு அதிவிரைவுப் படகு மோதி மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
நேற்றிரவு 9.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 34 வயதுடைய உறுப்பினருக்கு மூக்கின் மேல் பகுதியிலும் 36 வயதுடைய மற்றொருவருக்கு கால்கள் மற்றும் கைகளிலும் காயம் ஏற்பட்டதாக மலேசிய கடல்சார் இயக்குநர் கேப்டன் சலேஹுடின் ஜக்காரியா தெரிவித்தார்.
மேல் சிகிச்சைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர்களின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக அவர் கூறினார்.
போக்குவரத்துப் பிரிப்புத் திட்டப் பகுதியிலிருந்து தஞ்சோங் ரூ செபாங் கடல்பகுதி நோக்கிச் செல்வதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகை லுமுட் கடல் கண்காணிப்பு அமைப்பு இரவு 8.00 மணியளவில்
கண்டறிந்தது.
ஓப் பட்கோர் ஆப்டிமா ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த மலேசிய கடல்சார் ரோந்துப் படகைக் கொண்டு அந்த சந்தேகத்திற்குரிய படகை இடைமறிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இருப்பினும், சட்ட அமலாக்க தரப்பின் வருகையை அறிந்திருந்தும் மூன்று உயர் சக்தி இயந்திரங்களைக் கொண்ட மீன்பிடிப் படகு ஆக்ரோஷமாகச் செயல்பட்டு அமலாக்க செயல்பாட்டுப் படகின் இடது பக்கத்தை மோதி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியப் பினனர் தப்பிச் சென்றது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தரையிறங்கத் தவறியதால் அந்தப் படகு மலேசியக் கடற்பரப்பை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது என்றும் சந்தேக நபர்களையும் சம்பந்தப்பட்ட கடத்தல் வலையமைப்பையும் கண்டறிய சிறப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடல் வழி மூலம் மேற்கொள்ளப்படும் மனித கடத்தல் முயற்சிகள் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்ட அமலாக்கப் பணியாளர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதால் இதனை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் கடுமையாகக் கருதுவதாக சலேஹுடின் குறிப்பிட்டார்.