ஷா ஆலாம், அக். 19 – ECRL கிழக்குக் கரை ரயில் சேவையில் கோம்பாக்கிலிருந்து கிளந்தான் தலைநகரான கோத்தா பாரு வரை பயணிக்க, பொருளாதார வகுப்பு போக்குவரத்துச் சேவைக்கு (Transit) குறைந்தபட்சக் கட்டணமாக RM125 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாத மத்தியில் ECRL வணிக ரீதியிலான சேவைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்டண விவரங்களை Malaysia Rail Link Sdn Bhd (MRL) வெளியிட்டுள்ளது.
கோம்பாக்கிலிருந்து கோத்தா பாரு வரையிலான 523 கிலோமீட்டர் தூரப் பயணத்திற்கு விரைவு ரயில் சேவையான Ekspres-இல் குறைந்தபட்சக் கட்டணம் RM147 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, இந்தக் கட்டணக் கட்டமைப்புக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாக MRL தெரிவித்தது.

மேலும், பயணிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு மாறும் விலை நிர்ணய முறை (Dynamic Pricing) பயன்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு காரணிகளுக்கு ஏற்ப ரயில் கட்டணங்கள் மாறுபடக்கூடும்.
இதற்கிடையில், கோம்பாக்கிலிருந்து கோலா திரங்கானு செல்லும் பயணிகளுக்கு Transit சேவையில் குறைந்தபட்சக் கட்டணமாக RM95 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வழித்தடத்தில் Ekspres விரைவு ரயில் சேவைக்கான கட்டணம் RM110 முதல் தொடங்குகிறது.
அதேவேளையில், கோம்பாக்கிலிருந்து கோத்தாசாஸ் (KotaSAS) செல்லும் பயணிகள் Transit சேவையில் குறைந்தபட்சம் RM60 செலுத்த வேண்டியிருக்கும். Ekspres சேவைக்கான குறைந்தபட்சக் கட்டணம் RM68 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ECRL வணிக ரீதியிலான ரயில் சேவைகளைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாக இந்தக் கட்டணக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதும், கோம்பாக்கிலிருந்து கிழக்குக் கடற்கரையின் முக்கிய நகரங்கள் மற்றும் பயண இலக்குகளுக்குச் செல்வதற்கான ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ECRL திட்டத்தின் செயல்பாடு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள ஆரம்பக் கட்டணங்கள் பயணிகளுக்கான போக்குவரத்துச் செலவுகளைத் திட்டமிட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.






