ஷா ஆலாம், அக் 17 - RON 95 ரகப் பெட்ரோலில் தண்ணீர் கலந்திருந்ததால் வாகனங்களின் இயந்திரங்கள் பாதிக்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள 7 பெட்ரோல் நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, அந்த விவகாரம் தொடர்பாக அமைச்சுக்கு 10 புகார்கள் கிடைத்ததாக, சிலாங்கூர் உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குநர் முஹம்மது ஹனிப் அசாஅரி தெரிவித்தார்.
அதையடுத்து, சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் இருந்து ஆய்வக சோதனைக்காக 27 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளின் புகார்களின்படி, வாகன இயந்திரங்களில் வழக்கத்திற்கு மாறான சத்தம், அதிர்வு, ஆற்றல் இழப்பு, இயந்திரம் இயங்காமல் போனது மற்றும் இயந்திர வால்வுகள் கருகியது போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதியில் தண்ணீர் கலந்திருந்ததே இந்த இயந்திர பாதிப்புகளுக்குக் காரணம் என்பதை சில வாகனச் சேவை மையங்களும் உறுதிப்படுத்தியுள்ளன என்று முஹம்மது ஹனிப் அசாஅரி தெரிவித்தார்.

முதற்கட்ட சோதனையில் சம்பந்தப்பட்ட 7 பெட்ரோல் நிலையங்களும் முறையான உரிமங்களைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இருப்பினும், பெட்ரோலின் தரம் குறித்து தவறான வர்த்தக விவரங்களை வழங்கிய குற்றச்சாட்டின்கீழ் (வர்த்தக விவரங்கள் சட்டம் 2011), விசாரணைக்கு உதவும் வகையில் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அந்த நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அமைச்சு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் நிலைய நடத்துநர்களும் தங்களின் நிலத்தடி சேமிப்புத் தொட்டிகளைத் தவறாமல் பராமரித்து, எரிபொருள் தரம் மற்றும் பாதுகாப்புத் தரமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த எரிபொருள் பிரச்சினையால் தங்களின் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கும் வாகன ஓட்டிகள், தங்களின் பெட்ரோல் ரசீதுகள் மற்றும் வாகன பட்டறையின் சோதனை அறிக்கையையும் ஆதாரங்களாகப் பத்திரமாக வைத்திருந்து அமைச்சிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







