பராமரிப்புச் சேவைகளுக்கு ஆதரவளிக்க நிலையான நிதியை உருவாக்க மாநில அரசு திட்டம்

17 அக்டோபர் 2026, 8:45 AM
பராமரிப்புச் சேவைகளுக்கு ஆதரவளிக்க நிலையான நிதியை  உருவாக்க மாநில அரசு திட்டம்

கோலாலம்பூர், அக் 17 : பராமரிப்புச் சேவைகளுக்கு நீண்டகால நிதியுதவியை வழங்குவதற்கும், அச்சேவை வழங்குநர்கள் மாநில அரசின் உதவிநிதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் 'நிலையான பராமரிப்பு நிதி' ஒன்றை உருவாக்க சிலாங்கூர் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியான நகரமன்றக் கூட்டத்தில், மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி இதனைத் தெரிவித்தார்.

இந்த நிதியின் மூலம் பராமரிப்பு மைய நடத்துநர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க உதவுவதுடன், பராமரிப்புத் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மகளிர் மேம்பாடு, சமூக நலத் துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி

மாநில உதவிநிதியை மட்டுமே நம்பியிருக்காமல், தனியார் துறையின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள், நிதியாதரவு, மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகப் பங்களிப்புகள் போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தவும் மாநில அரசு முயல்கிறது.

மேலும், தற்போதைய பராமரிப்புச் சேவைச் சட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பராமரிப்புப் பெறுநர்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதே வேளையில், பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையங்களுக்குத் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றுக்கு வழிகாட்டி, முறைப்படுத்தும் நோக்கில் சிலாங்கூரின் 12 ஊராட்சி மன்றங்கள், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் சமூக நலத்துறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறப்புப் பணிக்குழுவின் கீழ் ஓரிட மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் நடமாட்டப் பிரச்சினைகள் உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக கைப்பிடிகள், சாய்வுதளங்கள் மற்றும் வழுக்காத பாய்கள் போன்ற உபகரணங்களை வழங்க 4 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அன்பால் சாரி தெரிவித்தார்.

இவற்றுடன், பராமரிப்பு மையங்களின் சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 'பராமரிப்பு மைய அதிகாரமளித்தல் திட்டம்' ஒன்றையும் அறிமுகப்படுத்த சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.