கோலாலம்பூர், அக் 16: மலேசிய செமிகண்டக்டர் ஐசி டிசைன் தொழிற்துறை பூங்காவில் ( IC Design Park) உள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஆறு உள்நாட்டு செமிகண்டக்டர் சில்லுகள், ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 30 கோடி ரிங்கிட் மதிப்பிலான விற்பனை மதிப்பைக் கொண்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிர் தெரிவித்தார்.
மலேசியா வெறும் உற்பத்தியோடு நின்றுவிடாமல், நுண்மின்சுற்று (IC- Integrated Circuit) வடிவமைப்பில் தனது திறனை வளர்த்துக்கொண்டு, சொந்தமாக தொழில்நுட்பத்தை உருவாக்கி அதன் உரிமையைப் பெறுவதற்கான லட்சியத்தை இந்த கண்டுபிடிப்புகள் நிரூபிக்கின்றன என்று அவர் கூறினார்.
நேற்று, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் வர்த்தக உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியான சிலாங்கூர் AI & செமிகண்டக்டர் உச்சநிலை மாநாட்டில் இந்த சில்லுகளை அறிமுகப்படுத்தி அமைச்சர் பேசினார்.

" நமது அடுத்த கட்ட வளர்ச்சி 'மலேசியாவால் தயாரிக்கப்பட்டது' (Made by Malaysia) என்பதன் மூலம் அதிக மதிப்பை உருவாக்குவதிலும், அதை தக்கவைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
அந்த மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஆறு முக்கிய கண்டுபிடிப்புகளில்,
*ஸ்கைசிப் (SkyeChip) நிறுவனத்தின் கேமராக்கள், ரோபோக்கள் மற்றும் தொழிற்சாலை முறைக்கான AI- செயற்கை நுண்ணறிவு சில்லு
*மைஸ்டோரேஜ் (MaiStorage) நிறுவனத்தின், கணினிகள் மற்றும் சர்வர்களுக்கான AI ஸ்டோரேஜ் தீர்வு,
* சிலிகான்எக்ஸ் (SiliconX) நிறுவனத்தின் தொழில்துறை மற்றும் வாகனப் பயன்பாடுகளுக்கான மாற்றியமைக்கக்கூடிய மின்சுற்று (Field-Programmable Gate Array (FPGA)
* இன்ஃபினெக்ஸ் (Infinecs நிறுவனத்தின் வாகன மின்திறன் ஒழுங்குபடுத்தி (automotive power regulator)
* வீராக் ஸ்பேஸ் (Weeroc Space) நிறுவனத்தின் செயற்கை கோள்,விண்வெளி முறைக்கான மின் திறன் கட்டுப்பாட்டுச் சில்லு( power controller chip)
*ஆல்ஃபாஸ்விஃப்ட் (Alphaswift) நிறுவனத்தின் தானியங்கி முறைக்கான மினி விமான கட்டுப்பாட்டு சில்லு ஆகியவை அடங்கும் .
இந்த கண்டுபிடிப்புகளை வர்த்தக ரீதியாக வெற்றிகரமான தயாரிப்புகளாக மாற்றுவதும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதுமே அடுத்தகட்ட சவாலாகும் என்று அக்மல் கூறினார்.
மலேசியா வெறும் உற்பத்தியைத் தாண்டி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படும் சிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தேசிய செமிகண்டக்டர் உத்தியானது ஐசி டிசைண்ட் மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் துறையில் மலேசியாவின் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாரவர்
இதன் மூலம் தற்போதுள்ள 10 உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் 100 கூடுதல் நிறுவனங்கள் உட்பட மொத்தம் 110 உயர் மதிப்புள்ள செமிகண்டக்டர் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 60,000 மலேசிய பொறியாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஏஆர்எம் (ARM) லிமிடெட் உடனான கூட்டாண்மை மூலம் 4 ஆண்டுகளில் 10,000 மலேசியர்களுக்கு ஐசி டிசைன் திறன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.





