ஷா ஆலாம், செப் 17 : சிலாங்கூர் மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் தரவு மையங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, உள்நாட்டு சில்லு (Integrated Circuit -IC ) வடிவமைப்பு நிறுவனங்களுக்கு ஒரு சந்தையை உருவாக்க சிலாங்கூர் முயல்கிறது.
இதற்காக, புதிய வசதிகள் தங்களின் தேவைகளில் குறைந்தது 30 விழுக்காடு உள்நாட்டு உள்ளடக்கங்களைப் (Local Content) பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உள்நாட்டு உள்ளடக்கத் தேவை என்பது சில்லு வடிவமைப்பு, குளிரூட்டும் முறை (Cooling Systems) மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறியியல் சேவைகளை உள்ளடக்கியது என சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப பொருளாதார இலக்கவியல் கழகம் (SIDEC) தெரிவித்தது.
உள்நாட்டு செமிகண்டக்டர் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைப் பெறுவதோடு, அவை வெறும் தொடக்க நிலை (Startup) நிறுவனங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், வளர்வதையும் உறுதி செய்வதற்கான ஒரு விரிவான முயற்சியின் ஒரு பகுதியே அந்த அணுகுமுறை என SIDEC- கின் தலைமை நிர்வாக அதிகாரி யாங் காய் பிங் தெரிவித்தார்.

"நிதி, வாடிக்கையாளர், சந்தை ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆதரவை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
ஏனெனில், இதில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும், வலுவான பொறியியல் திறன் மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ்,வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் மேம்பட்ட தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக மாறுவதை சிலாங்கூர் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்திட்டம், இறக்குமதிக்கான தேவையைக் குறைக்கவும், உள்நாட்டு நிறுவனங்களை வலுப்படுத்தவும் மற்றும் நிலையான ஊதிய உயர்வுக்கு ஆதரவளிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் முக்கிய முயற்சிகளில், அனைத்துலக அளவிலான செமிகண்டக்டர் மையத்தை உருவாக்குதல், உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஆதரவளிக்க 'சிலாங்கூர் செமிகண்டக்டர் நிதி'யை வழங்குதல் மற்றும் மலேசிய தொழில்துறை நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களுடன் இணைக்க சைபர்ஜெயாவில் இரண்டாம் கட்ட 'ஐசி டிசைன் பார்க் '-கை (IC Design Park) உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

'ஐசி டிசைன் பார்க்'-கின் மூலம் 500 அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 500 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள ஐந்து நிறுவனங்களை உருவாக்கவும் சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்திருப்பதாக, காய் பிங் தெரிவித்தார்.
தற்போதைய முக்கிய சவால் என்னவென்றால், நிறுவனங்கள் ஆரம்பக்கட்ட அடைகாத்தல் (Incubation) நிலையைத் தாண்டி வளர்வதற்கு உதவுவதாகும்.
ஏனெனில், வளர்ச்சிப் படியில் தேவைப்படும் ஆதரவு முறையானது, ஆரம்பக்கட்ட நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஆதரவிலிருந்து வேறுபட்டது.
"நிறுவனங்களை ஆரம்பக்கட்ட செயல்முறைகள் மூலம் கொண்டு செல்வதும், அவற்றை வளரச் செய்வதும் இரண்டு வெவ்வேறு சவால்களாகும்.
ஆரம்பக்கட்ட ஆதரவிற்கான பயனுள்ள அணுகுமுறை, வளர்ச்சிப் படியிலும் அதே வெற்றியைத் தரும் என்று கூற முடியாது," என காய் பிங் கூறினார்.
இதனிடையே, 'ஐசி டிசைன் பார்க் 1' மற்றும் 'ஐசி டிசைன் பார்க் 2' இல், 20 தொழில்துறை பங்காளிகள் இணைந்துள்ளன.

மலேசியாவின் ASEM செமிகண்டக்டர் அகாடமி, ஏற்கனவே 850 பொறியாளர்களுக்குப் பயிற்சியளித்துள்ளது. மேலும் இங்கு 100 விழுக்காடு வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக வளர்ச்சிக்கான மூலதனத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுமென காய் பிங் கூறினார்.
நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, எஹ்சான் கேபிட்டலின் (Ehsan Kapital) கீழ் RM100 மில்லியன் மதிப்புள்ள 'எஹ்சான் செமிகண்டக்டர் நிதி' (Dana Semiconductor Ehsan) உருவாக்கப்பட்டுள்ளது.
இது சிப் உருவாக்கத்தில் அதிக மூலதனம் தேவைப்படும் டேப்-அவுட் (Tape-out), சோதனை மற்றும் பேக்கேஜிங் போன்ற மேம்பாட்டு நிலைகளுக்கு ஆதரவளிக்கும்.
இந்தத் தேவைகளை ஆரம்பக்கட்ட மானியங்களால் ஈடுசெய்ய முடியாது.
"நிதித்துறையைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு பிரத்யேக வழியை உருவாக்கியுள்ளோம்; நிறுவனங்களைச் சந்தையில் தங்களின் வழியைத் தாங்களே தேடிக்கொள்ளும்படி நாங்கள் விட்டுவிடவில்லை.
எஹ்சான் கேபிட்டலின் கீழ் உள்ள எஹ்சான் செமிகண்டக்டர் நிதி, வடிவமைப்பு முதல் டேப்-அவுட், சோதனை மற்றும் பேக்கேஜிங் வரையிலான அதிக மூலதனம் தேவைப்படும் நிலைகளுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுக் குழுவானது செமிகண்டக்டர் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை, துணிகர மூலதன (Venture Capital) அனுபவத்துடன் இணைக்கிறது.
இதனால் நிறுவனங்கள் நிதியுதவியுடன் தொழில்துறை அறிவு சார்ந்த வழிகாட்டுதலையும் பெறுகின்றன," என்று அவர் கூறினார்.
மலேசிய வடிவமைப்பில் உருவான தொழில்நுட்பங்கள் ஆசியான் (ASEAN), பிரிக்ஸ் (BRICS), குளோபல் சவுத் (Global South) மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (MENA) உள்ளிட்ட சந்தைகளில் ஊடுருவ உதவுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
மலேசிய பங்கு பரிவர்த்தனையின் முதன்மைச் சந்தையில் ஸ்கைசிப் (SkyChip) பட்டியலிடப்பட்டதையும், அது RM352 மில்லியன் நிதியைத் திரட்டியதையும் அவர் ஓர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.
மேலும், கிரேட்அசிக் (GreatAsic) நிறுவனம் கிட்டத்தட்ட 7 மில்லியன் அமெரிக்க டாலர் (RM28.4 மில்லியன்) ப்ரீ-சீரிஸ் ஏ (Pre-Series A) நிதியுதவி பெற்றதையும், இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பிற நிறுவனங்கள் அடைய வேண்டிய வளர்ச்சிக்கான உதாரணங்களாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சிலாங்கூர் மூன்று முக்கிய செமிகண்டக்டர் பிரிவுகளில் கவனம் செலுத்தும் என்று காய் பிங் கூறினார்.
அவை, தானியங்கி (Automotive), குறைந்த உயர வான்வெளிப் பொருளாதாரம் (Low-altitude Economy - Drones/eVTOL) மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த இணையப் பொருட்கள் (AIoT) ஆகும்.
தானியங்கி துறை என்பது சிலாங்கூரின் உற்பத்தித் தளத்தின் இயல்பான விரிவாக்கமாகும்.

அதே வேளையில் ட்ரோன்கள், மின்சார செங்குத்து ஏகுகை மற்றும் இறங்கு வானூர்திகள் (eVTOL) மற்றும் பிற ஆளில்லா வான்வழி வாகனங்கள் மலேசியா இம்மாவட்டத்தில் வலுவான நிலையை உருவாக்க வாய்ப்புகளைத் திறக்கின்றன என்றார்.
மறுபுறம், AIoT என்பது உள்நாட்டு வடிவமைப்பு நிறுவனங்களுக்கு சென்சார்கள், எட்ஜ் ஏஐ முடுக்கிகள் (Edge AI Accelerators) மற்றும் இணைப்புத் தொகுதிகள் (Connectivity Modules) போன்ற துறைகளில் சொந்த அறிவுசார் சொத்துரிமைகளை (IP) உருவாக்க உதவும்.
இந்தத் துறைகள் ஒரு 'ரோபோடிக் கேம்பஸ்' (Robotic Campus) திட்டத்திற்கும் ஆதரவளிக்கும்.




