கோலாலம்பூர், அக் 17: 2026-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (SIBS 2026) முதல் மூன்று நாட்களில், கிட்டத்தட்ட 370 கோடி ரிங்கிட் மதிப்பிலான சாத்தியமான வர்த்தகப் பரிவர்த்தனைகள் பதிவாகியதாக, இன்வெஸ்ட் சிலாங்கூர் (Invest Selangor) நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹாசன் அஸாரி இட்ரிஸ் தெரிவித்தார்.
இந்த உச்சநிலை மாநாட்டிற்கு, 45,050 பேர் வருகை புரிந்துள்ளனர். அதோடு, வர்த்தகக் கேள்விகள், எல்லை கடந்த வர்த்தக தொடர்புக்கான் வாய்ப்புகள், பல்வேறு தொழில் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் ஆகியவற்றையும் இந்த மாநாடு ஏற்படுத்தி தந்திருப்பதாக அவர் கூறினார்.

நேற்று, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில், SIBS மாநாட்டின் பாராட்டு விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய போது டத்தோ ஹாசன் அஸாரி இட்ரிஸ் அதனைத் தெரிவித்தார்.
SIBS-இன் வெற்றி என்பது வெறும் வருகையாளர்களின் எண்ணிக்கை மற்றும் வர்த்தக பரிவர்த்தனை மதிப்பை மட்டும் பொறுத்தது அல்ல ; மாறாக பங்கேற்பாளர்களிடையே உருவாகும் நீண்ட கால வர்த்தக உறவுகள், முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் ஹாசன் கூறினார்.
"பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து, புதுமைகளைப் புகுத்தி, நிலையான வட்டாரத்துவ வளர்ச்சியை ஊக்குவிப்பதே SIBS மாநாட்டின் உண்மையான நோக்கமாகும்," என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) மாநில வளர்ச்சிப் பாதைக்கு ஏற்ப, இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் எல்லை கடந்த ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் அமைந்திருக்கும் அதன் முக்கியமான ஏற்ற இடம், மேம்பட்ட உள்கட்டமைப்பு, வலுவான விநியோகச் சங்கிலி, திறமையான ஆட்பலம் மற்றும் வத்தக தோழமை கொண்ட அரசாங்கம் ஆகியவை ஆசியான் சந்தைக்கு தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்வெஸ்ட் சிலாங்கூர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த SIBS உச்சநிலை மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.









