வர்த்தக, மக்கள் சேவைகளை எளிதாக்கும் SA500, NINE இரு செயலிகள் அறிமுகம்

15 அக்டோபர் 2026, 9:45 AM
வர்த்தக, மக்கள் சேவைகளை எளிதாக்கும் SA500, NINE இரு செயலிகள் அறிமுகம்
வர்த்தக, மக்கள் சேவைகளை எளிதாக்கும் SA500, NINE இரு செயலிகள் அறிமுகம்

கோலாலம்பூர், அக் 15 : குத்தகையாளர்களின் பணப்புழக்கப் பிரச்சினைக்கு தீர்வாகவும் , பொதுமக்கள் மாநில அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் சேவைகளை எளிதாக்கவும் 'SA500' மற்றும் 'NINE' ஆகிய இரு புதிய செயலிகளை, MBI- சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெறும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் போது, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவ்விரு செயலிகளையும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி SA500, NINE ஆகிய இரு செயலிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்

இதில் SA500 செயலி, மாநில அரசு, மாவட்ட - நில அலுவலகங்கள் மற்றும் சிலாங்கூர் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களின் திட்டங்களில் ஈடுபட்டுள்ள சுமார் 500 நிறுவனங்கள் மற்றும் குத்தகையாளர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

குத்தகையாளர்கள் பணிகளை முடித்த பிறகு அதற்கான இறுதிப் பணம் வந்து சேருவதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் பணப்புழக்க நெருக்கடியைச் சமாளிக்க இது உதவுகிறது.

இதன் மூலம் அவர்கள் நிதிப் பற்றாக்குறையால் பணிகளை நிறுத்தாமல், மேம்பாட்டுத் திட்டங்களைத் தொய்வின்றித் தொடர முடியும்.

இது கேப்பே (CapBay) நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் 'சிலாங்கூர் அட்வான்ஸ்'-சின் (Selangor Advance) விரிவாக்கமாகும்.

மற்றொரு செயலியான NINE, மாநில அரசின் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு 'சூப்பர் ஆப்' (Super-App) ஆகச் செயல்படுகிறது.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சிலாங்கூர் மாநில அரசின் ஒரே அதிகாரப்பூர்வச் செயலியாக அறிவிக்கப்பட்டுள்ள இதில், டிஜிட்டல் பணப்பை (E-Wallet), ஊராட்சி மன்றங்களின் சேவைகள் மற்றும் மாநில அரசின் பல்வேறு உதவித் திட்டங்களை அணுகும் வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநில அரசு வழங்கும் மாதத்திற்கு 30 ரிங்கிட் மதிப்பிலான பொதுப் போக்குவரத்து உதவித் தொகையைப் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ தளமாகவும் இச்செயலி விளங்குகிறது.

இந்த உதவித் தொகை கடந்த அக்டோபர் 1 முதல் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) இரயில் சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 'செப்பாட்' (CEPat) செயலி வரும் டிசம்பர் 31 உடன் நிறுத்தப்படவுள்ளதால், அதன் பயனர்கள் செப்டம்பர் 15 முதல் படிப்படியாக இந்த NINE செயலிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

எதிர்காலத்தில் சொத்து வரி, நில வரி மற்றும் வாகன நிறுத்துமிடக் கட்டணம் செலுத்தும் வசதிகளும் இதில் முழுமையாக இணைக்கப்படவுள்ளன.

MBI இன் துணை நிறுவனமான சிலாங்கூர் இ-வாலட் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த NINE செயலியை பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் மூலம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.