டாமான்சாராவில் சுழற்காற்று: இடிமேகங்களே காரணமென மெட்மலேசியா விளக்கம்

14 அக்டோபர் 2026, 8:55 AM
டாமான்சாராவில் சுழற்காற்று: இடிமேகங்களே காரணமென மெட்மலேசியா விளக்கம்

கோலாலம்பூர், அக் 14 : நேற்று மாலை சிலாங்கூர், டாமன்சாரா பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று , அப்பகுதியில் திரண்டிருந்த இடி மேகங்களே (Cumulonimbus) காரணம் என மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.

புயல் மேகங்கள் உருவாகும் போது ஏற்படும் காற்றின் மாறுபட்ட திசைவேகம் மற்றும் மேல்நோக்கிய காற்று நீரோட்டம் ஆகியவற்றின் காரணமாக சுழற்காற்று உருவாகிறது என அவர் கூறினார்.

மலேசியாவில் ஏற்படும் சுழற்காற்றுகள் அனைத்தும் 10 மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட சிறிய அளவிலானவை என்றும், அவை மிகக் குறுகிய காலமே நீடிக்கும் என்றும் அவர் விளக்கினார்.

அதன் காரணமாக, வானிலை ராடார் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் அவை உருவாவதைக் கண்டறிவது கடினம் . எனினும், நேற்று அக்டோபர் 13 -ஆம் தேதி, மாலை 5.30 மணிக்கே சிலாங்கூர் மாவட்டங்களுக்கான இடிமின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டிருந்ததாக அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இத்தகைய நிலச்சுழல் மற்றும் கடல்சுழல் (waterspout) நிகழ்வுகள் பொதுவாகப் பருவமழை மாற்றக் காலங்களான மார்ச் முதல் மே வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் அதிகமாக நடக்கும் என்று டாக்டர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

வளிமண்டலத்தின் சீரற்ற ஈரப்பதமான நிலை மற்றும் பல்வேறு திசைகளிலிருந்து வீசும் பலவீனமான காற்று ஆகியவற்றின் காரணமாகவே இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

நேற்று, சாலைக் கட்டண சாவடி ஒன்றில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்த போது சுழற்காற்று வீசிய காணொளிகளை சமூக ஊடகப் பயனர்கள் பகிர்ந்திருந்தனர்.

அதில் பலத்த காற்றின் காரணமாக வாகனம் ஒன்று காற்றில் சற்று தூக்கப்பட்டதைக் காண முடிந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.