ஷா ஆலம், ஜூலை 11: இன்று காலை செகிஞ்சான், ஜாலான் தாலி ஆயிர் 4 (Jalan Tali Air 4) பகுதியில் உள்ள நெல்வயல் ஒன்றில் சுழற்காற்று வீசியதாக நம்பப்படுகிறது.
ஆரம்பகட்ட தகவல்களின்படி இந்தச் சம்பவம் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை நீடித்தது என்றும், எனினும் இதனால் யாருக்கும் காயங்களோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்றும் சிலாங்கூர் சுற்றுலா -ஊராட்சி மன்ற ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம் தெரிவித்தார்.
"இந்தச் சம்பவம் காலை 11.40 மணியளவில் நெல்வயலின் நடுவே, செகிஞ்சான் முனையத்திற்கு (Terminal Sekinchan) அருகில் நிகழ்ந்துள்ளது.
எந்தவொரு சேதமும் ஏற்படாததற்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்," என்று செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
முன்னதாக, ஜாலான் தாலி ஆயிர் 4 பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும், நெல்வயலின் நடுவே சுழற்காற்று வீசும் 57 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.




