6 மாதங்களில் பள்ளிகளில் 4,289 பகடிவதை சம்பவங்கள் - கல்வியமைச்சர்

14 அக்டோபர் 2026, 4:34 AM
6 மாதங்களில் பள்ளிகளில் 4,289 பகடிவதை சம்பவங்கள் - கல்வியமைச்சர்

ஷா ஆலாம், அக் 14: கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், விடுதிகள் உட்பட பள்ளிகளில் 4,289 பள்ளி பகடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதில் உடல் ரீதியான பகடிவதை 2,480 சம்பங்களாகவும், வாய்மொழி பகடிவதை 1,386 சம்பங்களாகவும், சைகை அல்லது வாய்மொழியற்ற பகடிவதை 243 சம்பவங்களாகவும், இணையவழி பகடிவதை 180 சம்பங்களாகவும் பதிவாகியதாக கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

பள்ளிகளிலோ விடுதிகளிலோ மாணவர்கள் சம்பந்தப்படும் ஒவ்வொரு பகடிவதைச் சம்பவத்தையும் கல்வி அமைச்சு மிகவும் தீவிரமாகக் கருதுகிறது.

இதனை எதிர்கொள்ள அமலாக்கம், பள்ளி மற்றும் விடுதி கண்காணிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு, உளவியல் சமூக தலையீடு மற்றும் மாணவர் நற்பண்பு மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையை அமைச்சு வலுப்படுத்தி வருகிறது.

2026-ஆம் ஆண்டு பள்ளி பகடிவதை எதிர்ப்புச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை குறித்தும், மாணவி ஜாரா கைரினாவின் மரண விசாரணை அறிக்கையின் வெளிப்பாடுகளைத் தொடர்ந்து விடுதி கண்காணிப்பு மேம்பாடுகள் குறித்தும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் ஃபவ்வாஸ் முகமட் ஜான் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த புள்ளிவிவரங்கள் பகடிவதையை ஒடுக்கும் முயற்சிகள், வெறும் ஒழுங்கு நடவடிக்கை என்ற அளவோடு நின்றுவிடாமல், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

பெறப்படும் ஒவ்வொரு புகாரும் முறையாக விசாரிக்கப்பட்டு, தகுந்த தலையீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விடுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த 2025-ஆம் ஆண்டில் 30 லட்சம் ரிங்கிட் செலவில் 200 விடுதிப் பள்ளிகளில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இவ்வாண்டு, அந்த முயற்சி மேலும் தொடரப்பட்டு 50 லட்சம் ரிங்கிட் நி ஒதுக்கீட்டில் 333 விடுதிப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

அடுத்த கட்டமாக 2027-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள 1,000 பள்ளிகளுக்கு சிசிடிவி கண்காணிப்பை விரிவுபடுத்த 1கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பாதுகாப்பு கண்காணிப்பு என்பது வெறும் இந்த வசதிகளை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்று ஃபத்லினா வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலாக, பள்ளி ஊழியர்களின் கண்காணிப்பு, மாணவர்களின் நடத்தை மாற்றங்களைக் கவனிக்கும் விழிப்புணர்வு மற்றும் புகார்கள் மீது உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவையே பாதுகாப்பான விடுதிச் சூழலை உறுதி செய்வதற்கான முக்கிய அம்சங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.