பள்ளியில் பகடிவதை: காணொளியை வைரலாக்காதீர்; உடனடியாக உதவி தேடுவீர்

18 செப்டெம்பர் 2026, 11:47 AM
பள்ளியில் பகடிவதை: காணொளியை வைரலாக்காதீர்; உடனடியாக உதவி தேடுவீர்

பெட்டாலிங் ஜெயா, செப் 18: பள்ளிகளில் நடக்கும் பகடிவதை சம்பவங்களைப் பார்க்கும் மாணவர்கள், உடனடியாக உதவி பெற வேண்டுமே தவிர, அந்தச் சம்பவங்களைப் படம் பிடிக்கவோ அல்லது சமூக ஊடகங்களில் பரப்பவோ வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக கட்டொழுங்கு ஆசிரியர் அல்லது ஆலோசகர் போன்ற நம்பகமான நபர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்; அப்போது தான் உடனடி நடவடிக்கை எடுக்க முடியும் என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நடாலி அலின் தெரிவித்தார்.

" பகடிவதை செய்பவர்களுக்குத் தொடர்ந்து வம்பு செய்ய இடம் கொடுக்காதீர்கள். மாணவர்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நடந்தால், அதிகாரிகள் அதில் தலையிட முடியும்," என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில பகடிவதை எதிர்ப்பு பிரச்சார தொடக்க விழாவின் போது தெரிவித்தார்.

உதவி கோருவது பலவீனத்தின் அறிகுறி அல்ல, மாறாக பகடிவதை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்.

மேலும், பகடிவதைச் சம்பவங்களை ஒரு பொழுதுபோக்காகப் பார்த்து ஆரவாரம் செய்வதோ, படம்பிடிப்பதோ அல்லது வீடியோக்களைப் பரப்புவதோ கூடாது என்று அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

ஏனெனில் இத்தகைய செயல்கள் பாதிக்கப்பட்டவருக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், பெற்றோர் எப்போதும் பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், வீட்டில் உள்ள பிள்ளைகளின் நடத்தையை மட்டும் வைத்து அவர்களின் உண்மையான நிலையை மதிப்பிடக் கூடாது என்றும் நடாலி கூறினார்.

"வீட்டில் பிள்ளை நல்ல பிள்ளையாகத் தெரியலாம், ஆனால் பெற்றோர் பள்ளியில் பிள்ளையின் நிலை எப்படி இருக்கிறது என்று ஆசிரியர்களிடம் அடிக்கடி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் சில நேரங்களில் பெற்றோராகிய நாம் சில விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிடலாம்," என்றார்.

பெற்றோர்கள் மிகவும் கண்டிப்புடன் இருப்பதோ அல்லது அடிக்கடி சத்தமிட்டுப் பேசுவதோ, பிள்ளைகள் தங்களின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ள பயப்படுவதற்குக் காரணமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சூழ்நிலை, வீட்டில் தங்களுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை என்று பிள்ளைகள் உணரும்போது, தங்களின் பிரச்சினைகளை மனதுக்குள்ளேயே புதைத்து வைக்கவோ அல்லது பள்ளியில் தங்களின் மன அழுத்தத்தை மற்றவர்கள் மீது வெளிப்படுத்தவோ வழிவகுக்கும் என்றாரவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.