செப்பாங் எஃப் 1 பந்தயம்: 95 கோடி ரிங்கிட் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது

13 அக்டோபர் 2026, 4:38 PM
செப்பாங் எஃப் 1 பந்தயம்: 95 கோடி ரிங்கிட் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது

ஷா ஆலாம், அக் 14 : இம்மாத தொடக்கத்தில் செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் நடைபெற்ற ஃபார்முலா 1 கிராண்ட் பிரி பந்தயம், மலேசியாவிற்குச் சுமார் 95 கோடி ரிங்கிட் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியதாக இளைஞர் விளையாட்டு அமைச்சு தெரிவித்தது.

ஃபார்முலா 1 நிர்வாகத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் ஜொஹாரி மக்களவையில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அதனைக் குறிப்பிட்டார்.

கடந்த அக்டோபர் 2 முதல் 4 வரை செப்பாங்கில் நடைபெற்ற எஃப் 1 கார் பந்தயம், பந்தய நாளன்று மட்டும் கலந்துகொண்ட 1,03,000 பார்வையாளர்கள் உட்பட ஒட்டுமொத்தமாகச் சுமார் 2,61,000 ரசிகர்களை ஈர்த்தது.

இதுதவிர, உலகம் முழுவதும் சுமார் 82 கோடியே 70 லட்சம் தொலைக்காட்சி பார்வையாளர்களால் இந்தப் பந்தயம் நேரலையாகக் காணப்பட்டது.

இந்த பந்தயத்திற்காக 97,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்ட வேளையில், 50,000-க்கும் மேற்பட்ட அனைத்துலக சுற்றுப் பயணிகளும், சுமார் 5,000 வெளிநாட்டுப் பணியாளர்களும் மலேசியாவிற்கு வருகை தந்தனர்.

வெளிநாட்டுப் பார்வையாளர்களின் இந்த வருகை, நாட்டின் சுற்றுலாத் துறை, விருந்தோம்பல், விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு சிறு - நடுத்தர தொழில்முனைவோரின் வருவாயை கணிசமாக உயர்த்தியது.

அத்துடன் மலேசியாவை உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு மற்றும் முதலீட்டு மையமாக உலக அரங்கில் அடையாளப்படுத்தவும் இது வலுச் சேர்த்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பத்தாங் சாடோங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோடியா சாபி எழுப்பிய கேள்விக்குத் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த பந்தயத்திற்காகச் செய்த செலவீனங்களுடன் ஒப்பிடுகையில், இதன் ஒட்டுமொத்த பொருளாதாரப் பயன்கள் எந்த அளவில் உள்ளன மற்றும் இதுகுறித்த முறையான செலவு-பயன் மதிப்பீடு நடத்தப்படுமா என்று ரோடியா மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் தவ்ஃபிக், இந்த பந்தயத்தை நடத்தியது அரசாங்கத்திற்கு முழுமையாக லாபகரமானதா இல்லையா என்பதை இன்னும் இறுதி செய்யவில்லை என்று கூறினார்.

செப்பாங் அனைத்துலக பந்தய தள நிர்வாகம் (SIC) இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஓர் ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து பந்தயத்திற்கான செலவுகள் மற்றும் அதன் உண்மையான பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த விரிவான செலவு-பயன் மதிப்பீட்டுப் பணிகளைத் தற்போது மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வறிக்கையின் இறுதி முடிவுகளின் அடிப்படையிலேயே, எதிர்காலத்தில் மலேசியா மீண்டும் ஃபார்முலா 1 பந்தயங்களை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.