ஷா ஆலாம், அக் 12 - வீட்டிலிருந்தபடியே உறைய வைக்கப்பட்ட உணவு (Frozen Food) வியாபாரம் செய்து வரும் டி. பிரியா, தனக்குக் கிடைத்த பிரஷர் குக்கர் மற்றும் எரிவாயு அடுப்பு போன்ற சமையல் உபகரண உதவி தனது உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவுமென நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னதாகத் தன்னிடம் இருந்த குறைந்த அளவிலான உபகரணங்களை வைத்தே வியாபாரம் செய்து வந்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போது ஐ -சீட் (I-SEED) மூலம் கிடைத்திருக்கும் இந்த புதிய உபகரணங்கள் தனது சுமையைக் குறைத்துள்ளதாகவும், தயாரிப்புகளை அதிகரித்து வருமானத்தை உயர்த்த உதவுமெனவும் அவர் கூறினார்.
ஐ -சீட் உதவித் திட்டத்தின் மூலம் கூடுதல் மின் இயற்றியைப் (Generator) பெற்றவர் பி. ராஜு.

இது தனது தற்போதைய வியாபாரத்தை விரிவுபடுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் கூறினார்.
கரும்புச் சாறு வியாபாரியான அவர், ஏற்கனவே தன்னிடம் மின் இயற்றி இருந்தாலும், இந்தக் கூடுதல் உபகரணம் பிற வியாபார நடவடிக்கைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்த உதவிக்காக மாநில அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இது தனது கரும்புச் சாறு வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என நம்பிக்கையை வெளியிட்டார்.
ஐ சீட் சிறுதொழில் முனைவோர் தங்களது வியாபாரத்தை வலுப்படுத்தவும், வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் தேவையான உபகரணங்களை வழங்கி ஆதரவளிக்கின்றது.

முன்னதாக அவ்விருவரும், இங்குள்ள பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகத்தின் கெனாங்கா மண்டபத்தில் நடைபெற்ற, புளூபிரிண்ட் திட்டம் (Blueprint Program) மற்றும் சிலாங்கூர் இந்திய தொழில்முனைவோர் உபகரண உதவித் திட்ட (I-SEED) விழாவில் தங்களது தொழிலுக்கான உதவியைப் பெற்றுக் கொண்டனர்.
கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம் அந்த உதவிப் பொருட்களை வழங்கினார்.

அந்நிகழ்ச்சியில் , பெட்டாலிங் மாவட்டத்தில் மொத்தம் 43 பேர் உதவிப் பொருட்களைப் பெற்றனர்; அவர்களில் 6 பேர் புளூபிரிண்ட் (Blueprint) திட்டத்தின் மூலமும், 37 பேர் ஐ-சீட் (I-SEED) திட்டத்தின் மூலமும் அந்த உதவிகளைப் பெற்றனர்.




