நாட்டில் ஆண்டுதோறும் 10,000 பேருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு: உறுப்பு தான விழிப்புணர்வை தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு முடிவு

12 ஏப்ரல் 2026, 9:07 AM
நாட்டில் ஆண்டுதோறும் 10,000 பேருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு: உறுப்பு தான விழிப்புணர்வை தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு முடிவு
நாட்டில் ஆண்டுதோறும் 10,000 பேருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு: உறுப்பு தான விழிப்புணர்வை தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு முடிவு

ஷா ஆலம், ஏப்ரல் 12: மலேசியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10,000 முதியவர்கள் நாள்பட்ட சிறுநீரக நோயினால் (CKD) பாதிக்கப்படுவதாகவும், இது இறுதியில் சிறுநீரகச் செயலிழப்புக்கு இட்டுச் செல்வதாகவும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிகிச்சை மையங்களில் 50,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறுநீரகச் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று ஷா ஆலம் மாநகராட்சி (MBSA) கட்டடத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான உலகச் சிறுநீரக தினத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆண்டுதோறும் 10,000 புதிய நோயாளிகள் சிறுநீரகத்தின் இறுதிக்கட்டச் செயலிழப்பை எதிர்நோக்குவதாகவும், இவர்கள் உயிர்வாழ டயாலிசிஸ் (Dialysis) சிகிச்சை முறை அத்தியாவசியமாகிறது என்றும் அவர் கூறினார். தற்போது இந்நோய் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள முதன்மையான நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மலேசியச் சிறுநீரக அறவாரியம் (NKF) ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மாநில சுகாதாரத் துறை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பேசிய டாக்டர் சுல்கிப்ளி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கான மிகச்சிறந்த தீர்வாக இருப்பதால், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை அமைச்சகம் மேலும் தீவிரப்படுத்தும் என்றார்.

தற்போதைய டயாலிசிஸ் சிகிச்சை முறைகள் அதிகப்படியான நீர் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகளையும் உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, எதிர்காலத்தில் மருத்துவத் தேவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சமநிலையைப் பாதுகாக்கும் கொள்கைகள் வகுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதற்கிடையில், மாநில அளவிலான சுகாதாரத் திட்டங்கள் குறித்துப் பேசிய ஜமாலியா ஜமாலுடின், அரசாங்கத்தின் உறுப்பு தான விழிப்புணர்வு அழைப்பிற்குச் சிலாங்கூர் மாநில அரசு முழு ஆதரவு வழங்கும் என்று தெரிவித்தார்.

மேலும், மாநில அரசின் இலவசச் சுகாதாரப் பரிசோதனைத் திட்டமான 'சிலாங்கூர் சாரிங்' (Selangor Saring) திட்டத்தில், இனி வரும் காலங்களில் சிறுநீரக நோய் தொடர்பான ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளையும் சேர்ப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.

தற்போது உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.