ஷா ஆலம், அக் 4: சிலாங்கூர் மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதில் கல்வி முக்கிய அணுகுமுறையாக உள்ளது.
குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை கல்வியின் மூலம் உயர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக, மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் மக்கள் டியூஷன் உதவித் திட்டம் (PTRS) மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர் கல்விக்கான ஆதரவு ஆகியவை அந்த முயற்சிகளில் அடங்குமென
அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரப் பிரச்சனை மாநில பிள்ளைகளின் திறனைத் தடுத்து விடாமல் இருப்பதை சிலாங்கூர் உறுதிப்படுத்த விரும்புகிறது.
அதோடு கல்வி வாய்ப்பு, திறன்களை மேம்படுத்துவதோடு , அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளைப் பெறவும் வழி வகுக்க வேண்டுமென அமிரூடின் கூறினார்.
இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தில் (RS-2) அதற்கு முக்கியத்துவமும் செலுத்தப்பட்டுள்ளது என்றாரவர்.
அத்திட்டத்தில் ஒரு லட்சம் உயர் ஊதிய வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டங்கள் திட்டமிடப்பட்டிருப்பதை அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, பெர்டானா முன்னாள் பயிற்சியாளர் சங்கம் (Perdana Fellows Alumni Association) ஏற்பாடு செய்த இளைஞர் பொருளாதார கலந்துரையாடல் திட்டத்தில் அமிருடின் ஒரு முக்கிய பேச்சாளராகப் பங்கேற்றார்.
இந்த கலந்துரையாடல், பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்வாழ்வு குறித்து விவாதிக்க இளைஞர்களை, கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஒன்றிணைத்தது.









