ஷா ஆலாம்,செப் 30 - வெப்ப- வறண்ட வானிலை மற்றும் எல்லை கடந்த புகை மூட்டத்தைத் தொடர்ந்து, இவ்வாண்டு தொடங்கி, 50-க்கும் மேற்பட்ட விமான பயணங்களை உட்படுத்திய 14 செயற்கை மழை பொழிவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த நடவடிக்கை சபா, சரவாக்கையும் உட்படுத்தியிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் அதிகமாகுமென நட்மா தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.
மழைப் பொழிவை அதிகரிப்பதோடு, அணைக்கட்டுகளில் நீர் மட்டம் போதிய அளவில் இருப்பதை உறுதிச் செய்வதற்காக அந்த மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, நட்மாவின் நடவடிக்கை செயலாக்கப் பிரிவின் இயக்குநர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.
" வெயில் காலத்தை அடுத்து, அணைக்கட்டுகளில் நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்காக செயற்கை மழை பொழிவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு, வர்த்தகம், விவசாயம் ஆகியவற்றுக்கான நீர் தேவை பாதிக்கப்படாமல் இருக்க அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என டத்தோ மஸ்லி குறிப்பிட்டார்.
எல் நினோ பருவநிலை மாற்றம், இவ்வாண்டு இறுதி தொடங்கி அடுத்தாண்டு மத்தி வரையில் கடுமையான வெயிலையும் வறண்ட வானிலையையும் கொண்டு வரும் என்பதால், இந்த செயற்கை மழையைப் பொழிவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரிக்குமென அவர் குறிப்பிட்டார்.
"இன்று 800 கிலோகிராம் உப்பு கலந்த 6,000 லிட்டர் நீரை உள்ளடக்கிய நான்கு பெரிய கலன்களைக் கொண்டு மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மழையைக் கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் டத்தோ மஸ்லி கூறினார்.
இவ்வாண்டு இறுதியில் தொடங்கும் கடும் எல் நினோ பருவநிலை , சில இடங்களில் 40 பாகை செல்சியஸ் வரையில் கடும் வெயில் பாதிப்பினை ஏற்படுத்துமென கடந்த செப்டம்பர் 9 -ஆம் தேதி தேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்திருந்தது.





