கோலாலம்பூர், செப் 30 - மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனம் அதன் கூட்டு பங்காளியுடன் இணைந்து, கனடாவில், இரண்டாம் கட்ட இயற்கை திரவ எரிவாயு திட்டத்துக்கான முதலீட்டை இறுதிச் செய்துள்ளது.
அதன் வாயிலாக, 3,300 கோடி கனடிய டாலர் (RM9,470 கோடி) மதிப்பிலான தனியார் துறை முதலீடு உறுதிச் செய்யப்பட்டது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது சமூக வலைத்தளத்தில் அந்தத் தகவலைப் பகிர்ந்துக் கொண்டார்.
" இந்த முதலீட்டின் வாயிலாக, பிரிட்டிஷ் கொலம்பியா, கித்திமாட்டில் அமைந்திருக்கும் , கனடா இயற்கை திரவ எரிவாயுத் தளம், உலகின் மிகப் பெரிய இயற்கை திரவ எரிவாயு வசதியைக் கொண்டிருக்கும்.
மேலும் அனைத்துலக சந்தைக்கான எரிசக்தி கையிருப்பையும் அது வலுப்படுத்தும் " என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பெட்ரோனாசின் இந்த வெற்றிக்கு பிரதமர் தமது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் பெட்ரோனாசுக்கு ஆதரவளித்திருக்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கு அன்வார் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில், மலேசியா- கனடா இலையிலான நட்புறவை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை அதிகரிக்க, பிரதமர் கார்னி, கனடா பேராளர் குழுவினர் ஆகியோருடனான சந்திப்பை தாம் வரவேற்பதாகவும் அன்வார் கூறினார்.







