கோலாலம்பூர், செப் 28 — ஏழு தசாப்தங்கள் ஒன்றாக வாழ்ந்தப் பிறகு, தமது வாழ்க்கைத் துணையைப் பிரிய வேண்டிய மிகக் கடினமான ஒரு தருணத்தை துன் மகாதீர் முஹமட் இன்று எதிர்கொண்டார்.
இயந்திர சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி, ஆக்ஸிஜன் குழாய் அணிந்திருந்த துன் மகாதீர், துன் சித்தி ஹஸ்மாவின் இறுதிச் சடங்குகள் முழுவதும் கலந்துக் கொண்டார்.
மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அந்த முன்னாள் பிரதமர், பள்ளிவாசலில் இறுதி மரியாதை செலுத்திவிட்டு இறுதித் தொழுகையில் கலந்துகொள்வதற்கு முன்பு, ஒரு கணம் தனது மனைவியின் உடலை வெறித்துப் பார்த்தவாறு இருந்தார்.

தேசிய இஸ்லாமிய மையத்துக் கொல்லை-யை (Pusara Negara )வந்தடைந்ததும், டாக்டர் மகாதீர் தமது மனைவியின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
தமது சக்கர நாற்காலியில் இருந்தபடியே, குடும்ப உறுப்பினர்கள் அருகில் நிற்க, அவர் ஓர் அமைதியான சூழ்நிலையில் நல்லடக்கச் சடங்கைக் கவனித்தார்.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி 101 வயதை எட்டிய துன் மகாதீர், இறுதித் தருணங்களில் தமது மனைவியின் கல்லறைக்கு அருகில் கண்ணீர் சிந்துவதைக் காண முடிந்தது.
இத்தனை ஆண்டுகள் தன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட துணையை அவர் இறுதி முறையாகப் பார்த்தார்.

மலேசியர்களுக்கு, துன் மகாதீர் மற்றும் டாக்டர் சித்தி ஹஸ்மா ஆகியோர் வெறும் முன்னாள் பிரதமரும் அவரது மனைவியும் மட்டுமல்ல.
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய அன்பும் பாசமும், பெரும்பாலும் பொதுவெளியில் வெளிப்படுத்தப்பட்டது, பலரின் அன்பைப் பெறச் செய்தது.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் மிகவும் சாதாரண தோற்றங்களின் போதும், டாக்டர் சித்தி தமது கணவரின் பக்கத்திலேயே இருந்தார்.
அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை முழுவதும் அவருக்கு ஒரு துணையாகவும் ஆதரவுத் தூணாகவும் பணியாற்றினார்.
இந்த தம்பதியரின் எளிமையான இயல்பு, அவர்களின் நகைச்சுவைகள், கிண்டல்கள் மற்றும் அன்பான தொடர்புகளின் மூலம் அடிக்கடி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
டாக்டர் மகாதீரும் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் 1956 ஆகஸ்ட் 5-இல் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் கடந்த மாதம் தங்களது 70-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர்.
பல ஆண்டுகளாக, அவர் ஒரு மனைவியாகவும் அவர்களின் ஏழு பிள்ளைகளுக்குத் தாயாகவும் இருந்தது மட்டுமல்லாமல், துன் டாக்டர் மகாதீரின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் அவரது நீண்ட அரசியல் பயணத்திலும் அவரோடே இருந்தார்.
டாக்டர் சித்தி ஹஸ்மா இன்று காலை கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய கழகத்தில் (IJN) தனது 100-வது வயதில் காலமானார்.






