புத்ராஜெயா, செப் 28- மறைந்த துன் டாக்டர் சித்தி ஹாஸ்மாவின் நல்லுடல் புத்ராஜெயா பிரிசின்த் 20-இல் உள்ள தேசிய இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று காலை 9.20 மணியளவில் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் தமது 100-வது வயதில் காலமான அவர், முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவியின் மறைந்த மனைவி துன் எண்டோன் மஹ்மூத்தின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.
இந்த இறுதிச்சடங்கில் பகாங் மாநிலத்தின் தெங்கு அம்புவான் துங்கு அசிசா அமீனா மைமுனா இஸ்கந்தரியா, பினாங்கு யாங் டிபெர்துவா துன் ரம்லி ஙா தாலிப், பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் டாக்டர் சுல்கிப்ளி ஹசான் மற்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் அவருக்கு அதிகாரப்பூர்வ அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு வழங்கப்படும் என்று முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
தாய்மை குணம் கொண்ட சிறந்த ஆளுமையாக மறைந்த துன் சித்தி ஹாஸ்மா நினைவுகூரப்படுவார் என பிரதமர் கூறினார்.

முன்னதாக, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தி மைன்ஸ், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அசார் தொழுகைக்குப் பிறகு தாமான் சுங்கை பெசி இண்டாவில் உள்ள அஸ்-ஷெரீப் பள்ளிவாசலில் இறுதித் தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் நல்லடக்கத்திற்காக , சித்தி ஹஸ்மாவின் நல்லுடல் புத்ராஜெயாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

மறைந்த துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா மலேசியாவின் ஆரம்பகால மலாய் பெண் மருத்துவர்களில் ஒருவர் என்பதுடன், நாட்டின் பொது சுகாதாரத் துறையில் பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.









