கோலாலம்பூர், செப் 20 : டியூஷன் பயிற்சி மையங்களின் (Tuition Centres) உரிமையாளருக்கான நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கானப் பரிந்துரையை கல்வி அமைச்சு, அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன் வைக்கவுள்ளது.
2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘தனியார் கல்வி நிறுவன கொள்கை புத்தகத்தில்’ (Private Education Institutions Policy Book) இந்த நிபந்தனைகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு, இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்த நிபந்தனைகள் குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கருத்துக்களை கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதுடன், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்பதற்கு தயாராக உள்ளது," என்று அவ்வமைச்சு கூறியது.
மலேசிய சிறார்களின் வளர்ச்சி மற்றும் கற்றலுக்குப் பங்களிக்க விரும்பும் அனைத்து தரப்பினருக்கும் கல்வித்துறை எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.
இதில் டியூஷன் மைய நடத்துநர்களின் பங்களிப்பை அமைச்சு மதிப்பதாகவும், கல்வியின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அது மேலும் கூறியது.
டியூஷன் மையங்களின் தற்போதைய உரிமையாளர் நிபந்தனைகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியாவிலுள்ள தனியார் டியூஷன் மையங்கள் 2027-ஆம் ஆண்டு முதல் 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமை நிபந்தனையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இல்லையெனில் அவை செயல்பாட்டு உரிமங்களை இழக்க நேரிடும் என்று கல்வி அமைச்சு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த பங்குரிமை விதி, பொதுமக்களிடையே விவாதத்தையும், நடத்துநர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.





